கேரளாவில் குழந்தை கடத்தல்; தமிழ்நாட்டில் சிக்கிய தம்பதி, மகள் சிறையில் அடைப்பு

திருவனந்தபுரம்: கொல்லம் அருகே 6 வயது சிறுமியை கடத்தி ₹10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஓயூர் என்ற பகுதியை சேர்ந்த ரெஜி ஜான் என்பவரின் 6 வயது மகளான அபிகேல் சாரா கடந்த 27ம் தேதி வீட்டுக்கு அருகே டியூஷனுக்கு சென்றபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். மறுநாள் (28ம் தேதி) கொல்லம் நகரின் மையப்பகுதியிலுள்ள ஒரு பூங்காவில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார் .

விசாரணையில், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு பெண் அந்த சிறுமியை பூங்காவில் விட்டுச் சென்றது தெரியவந்தது. கடத்தல் சம்பவம் நடந்த 5வது நாள் தமிழகத்தில் செங்கோட்டை அருகே உள்ள புளியறையில் வைத்து கொல்லம் சாத்தனூரை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொல்லம் சாத்தனூரை சேர்ந்த பத்மகுமார் (52), அவரது மனைவி அனிதா குமாரி (45) மற்றும் மகள் அனுபமா (20) என கண்டுபிடிக்கப்பட்டது பத்மகுமாருக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்ததால் குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

விசாரணைக்குப் பின் மூன்று பேரையும் போலீசார் கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறுமியை கடத்துவதற்கு முதலில் அனுபமா ஒத்துக் கொள்ளவில்லை. அனுபமா சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வந்தார். இதன் மூலம் அனுபவமாவுக்கு மாதம் ₹3.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை பணம் கிடைத்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் யூடியூபிலிருந்து பணம் வருவது நின்றதால் இவரும் சிறுமியை கடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார் என்று போலீசார் கூறினர்.

The post கேரளாவில் குழந்தை கடத்தல்; தமிழ்நாட்டில் சிக்கிய தம்பதி, மகள் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: