பொன்னேரி அருகே நேற்றிரவு பயங்கரம் தலை துண்டித்து பிரபல ரவுடி கொடூர கொலை

பொன்னேரி: பொன்னேரி அருகே தலை துண்டித்து பிரபல ரவுடி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நடுரோட்டில் அமர வைத்து சரசரவென கழுத்தை அறுத்து உடலை சாலையில் வீசி விட்டு 4 பேர் கும்பல் தப்பி சென்றது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே மவுத்தம்பேடு கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி (52). இவர், வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருணா என்ற மனைவி, 2 மகள்கள் மற்றும் ராகேஷ் (எ) அப்பு (26) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் ராகேஷ், பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.

இவர் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தினமும் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக கடந்த வாரம் மாலையணிந்து விரதத்தை தொடங்கினார் ராகேஷ். அப்போது, ‘இனிமேல் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன்’ என்று உறுதிபூண்டு திருந்தி வாழ்ந்து வந்தார். தனது குடும்பத்தினருடன் பொன்னேரி அருகே வெப்பத்தூரில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு பொன்னேரியில் இருந்து வெப்பத்தூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு பைக்கில் ராகேஷ் புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து 4 பேர் கும்பல், 2 பைக்குகளில் பின்தொடர்ந்தது.

இதை பார்த்ததும் ராகேஷ் அதிர்ச்சியடைந்து பைக்கை வேகமாக ஓட்டினார். இருப்பினும் அந்த கும்பல், ராகேஷை துரத்தி பிடித்தது. அப்போது, ‘நீங்க யார், எதற்காக என்னை தடுத்தீர்கள்’ என்று ராகேஷ் கேட்க, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதையும் அந்த கும்பல் கண்டு கொள்ளாமல், சர்வ சாதாரணமாக கயிற்றால் ராகேஷின் இரு கைகளையும் பின்புறமாக இறுக்கமாக கட்டினர். இதில் ராகேஷ் அலறி கூச்சலிட்டார். பின்னர் அவரை பைக்கில் அமர வைத்தனர்.

அவர்களிடம் இருந்து ராகேஷ் தப்ப முயன்றார். இருப்பினும் அந்த கும்பல் விடாமல் பைக்கில் ஏற்றி மக்கள் நடமாட்டம் மிகுந்த மெதூர் பஜார் அருகே கொண்டு வந்தனர். பின்னர் நடுரோட்டில் உட்கார வைத்து ராகேஷின் தலையை பட்டாக்கத்தியால் சரசரவென அறுத்தனர். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். இதில் அவரது தலை துண்டானது. பின்னர் தலை மற்றும் உடலை சாலையில் வீசினர். மிகவும் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்து விட்டு அந்த கும்பல் பைக்கில் தப்பியது.

தகவலறிந்து பொன்னேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராகேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை பார்த்தனர். அதில் பதிவாகியிருந்த 2 பைக்குகளின் பதிவெண்ணை வைத்து 4 பேர் கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், பொன்னேரி டிஎஸ்பி (பொறுப்பு) கிரியா சக்தி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்முருகன், பலராமன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், 4 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக இக்கொலை நடந்ததா, தொழில் போட்டியா அல்லது முன்விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் மெதூர் பஜார் பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post பொன்னேரி அருகே நேற்றிரவு பயங்கரம் தலை துண்டித்து பிரபல ரவுடி கொடூர கொலை appeared first on Dinakaran.

Related Stories: