ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அபுதாபியில் கைது: நடிகர் ஆர்.கே.சுரேஷை பிடிக்கவும் முடிவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1.09 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில், பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு ‘ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனம் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் 25 முதல் 35 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதனால் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் என தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் ரூ.2,438 கோடி பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், சொன்னபடி ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு முதல் 2 மாதங்கள் மட்டும் பணத்தை கொடுத்தனர். அதன் பிறகு முதலீட்டாளர்கள் யாருக்கும் ஆருத்ரா நிதி நிறுவனம் சார்பில் பணம் அளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆருத்ரா நிதி நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதைதொடர்ந்து திடீரென ஆருத்ரா நிதி நிறுவனத்தை மூடி விட்டு அதன் உரிமையாளர் ராஜசேகர் அவரது மனைவி உஷா ராஜசேகர் மற்றும் இயக்குநர்களாக இருந்த பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ், மேலாளர்கள் பேச்சுமுத்து ராஜா, அய்யப்பன், முக்கிய ஏஜெண்டான ரூசோ உள்ளிட்ட 40 பேர் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டாக தமிழ்நாடு முழுவதும் 3,500 புகார்கள் அளித்தனர். இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஆருத்ரா நிதி நிறுவனம் 1.09 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி பணம் பெற்று மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ராஜசேகர், உஷா ராஜசேகர் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிர்வாகிகள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 22 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்கில் இருந்த ரூ.96 கோடி பணம் முடக்கப்பட்டது. 103 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டது. ஆருத்ரா மோசடி வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் மற்றும் 8 இயக்குனர்கள், நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத இயக்குனர்கள் 19 பேர், மேலாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இதுவரை 526 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 603 வகையான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரம் பக்க அளவில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர், உஷா ராஜசேகர் ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். மேலும், இன்டர்போல் மூலம் கைது செய்ய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் ரெட் கார்னர் ேநாட்டீஸ் விடுக்கப்பட்டது. இந்நிலையில் பல மாதங்களாக சர்வ சாதாரணமாக சுற்றி வந்த ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகரை, இன்டர்போல் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அபுதாபியில் கைது செய்தனர்.

அவரை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆருத்ரா வழக்கில், பாஜ நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், முக்கிய ஏஜெண்டான ரூசோ மூலம் ரூ.12.5 கோடி பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்மன் அனுப்பியும் இதுவரை ஆர்.கே.சுரேஷ் ஆஜராகவில்லை. இவரும் குடும்பத்துடன் துபாயில் பதுங்கி இருப்பது உறுதியாகி உள்ளது.

அதனை தொடர்ந்து விரைவில் நடிகர் ஆர்.கே.சுரேஷையும் இன்டர்போல் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்வார்கள் என்று உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பாஜ நிர்வாகிகள் பலர் சிக்குவார்கள் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அபுதாபியில் கைது: நடிகர் ஆர்.கே.சுரேஷை பிடிக்கவும் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: