ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு ரூ.13.50 லட்சம் லஞ்சம்: அதிமுகவை சேர்ந்த பெண் தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்

மேட்டுப்பாளையம்: ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய துணைத்தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்த விமலா ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருகிறார். துணைத்தலைவராக வினோத்குமார் என்பவர் இருந்து வருகிறார்.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற வார்டு உறுப்பினர்களூக்கு தலா ரூ.1.50 லட்சத்தை லஞ்சமாக வினோத் குமார் கொடுத்துள்ளார். இதனால் கடந்த 2020ம் ஆண்டு ஜன.7ம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் சார்பில் விளக்கம் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க 12வது வார்டு உறுப்பினர் வினோத்குமார் 9 வார்டு உறுப்பினர்களுக்கு தலைவர் முன்னிலையில் தலா ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த அறிவிப்பு கிடைக்க பெற்ற 15 நாட்களுக்குள் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தங்களது விளக்கத்தினை மாவட்ட கலெக்டரிடம் நேரிலோ அல்லது கடிதம் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.,’ என்று கூறப்பட்டுள்ளது.

The post ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு ரூ.13.50 லட்சம் லஞ்சம்: அதிமுகவை சேர்ந்த பெண் தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: