தொழில் முனைவோருடன் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி, டிச.1: கிருஷ்ணகிரியில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைப்பது தொடர்பாக, தொழில் முனைவோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்க தொழில் முனைவோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
சூளகிரி தாலுகா, சென்னப்பள்ளியில் 10 ஏக்கர் பரப்பில் ₹26.82 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 5 ஏக்கர் நிலத்தில், முதலீட்டாளர்களின் பொது பயன்பாட்டிற்காக 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு, 2,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு மற்றும் தரம் பிரிவு மையம், அலுவலகத்துடன் கூடிய உணவகம், 60 மெட்ரிக் டன் எடை திறன் கொண்ட மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்புகளை கட்டண அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்தை உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோருக்கு, நீண்ட கால குத்தகை அடிப்படையில் 5 முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பச்சையப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சீனிவாசன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்குழு செயலாளர் ரவி, வேளாண் துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) காளிமுத்து, தோட்டக்கலை துணை இயக்குநர் செந்தில்குமார், பையூர் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் அனிசாராணி மற்றும் தொழில் முதலீட்டாளர்கள், வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post தொழில் முனைவோருடன் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: