கிருஷ்ணகிரி ₹200 கோடி அந்நிய செலாவணி ஈட்டியது

கிருஷ்ணகிரி, டிச.1: கிருஷ்ணகிரி மாவட்டம், கொய்மலர் சாகுபடி மூலம், ₹150 முதல் ₹200 கோடி வரை அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது. தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். வரலாற்று சுவடுகள் பொதிந்து கிடக்கும் பூமி என்று பல்வேறு தனித்த அடையாளங்களை கொண்ட இம்மாவட்டத்தில் உள்ள ஓசூரில், குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் மூலம் தமிழகத்தின் ஒப்பற்ற தொழில் நகரம் என்ற பெருமைக்குரியதாக திகழ்கிறது. இது மட்டுமல்லாமல் கிரானைட் தொழில், மாம்பழக்கூழ் தயாரிப்பு, இயற்கை உணவு தயாரிப்பு என்ற அனைத்திலும் அசத்தி வருகின்றனர். கொய்மலர் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக ஓசூர், கெலமங்கலம், சூளகிரி மற்றும் தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலை, கொய்மலர் உற்பத்திக்கு உகந்ததாக உள்ளது. இந்தியாவில், 32400 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5.98 லட்சம் மெட்ரிக் டன் மலர் உற்பத்தி செய்து, தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த தேவைக்குமான 25 சதவீத பூக்களை, தமிழகமே உற்பத்தி செய்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3702 ஹெக்டேர் நிலப்பரப்பில், மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, அதன் மூலம் 39383 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொய்மலர்களான ரோஜா, ஜெர்பரா, கார்நேசன், கிரைசாந்திமம் போன்றவை 935 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 27.2 கோடி மலர் தண்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் நாட்டிற்கு ₹150 முதல் ₹200 கோடி வரை அந்நிய செலாவணி ஈட்டித்தருகிறது. இம்மாவட்டத்தில் கொய்மலர் உற்பத்திக்கு ஏற்ற சூழல் அமைந்தாலும், விற்பனை செய்வதற்கு பிரத்தியேக சந்தை வசதி இல்லை. 90 சதவீதத்திற்கும் மேலாக பண்ணைகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மீதம் உள்ள மலர்கள் பெங்களூரு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நபார்டு கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் நிதியின், மிஞ்சிய சேமிப்பு கணக்கிலிருந்து, ஓசூரில் ₹20.20 கோடி மதிப்பில் சர்வதேச தரத்துடன் “பன்னாட்டு மலர் ஏல மையம்” அமைக்கப்பட்டுள்ளது. இம்மலர் ஏல மையத்தில் சர்வதேச தரத்திற்கு கொய்மலர்கள் தரம் பிரிக்கப்பட்டு, ஆன்லைனில் ஏலம் விடப்படும். இம்முறையில் கூடுதலான ஏல விலையிலிருந்து, விலை குறைந்து கொண்டே வரும். வியாபாரிகள், தங்களுக்கு ஏற்ற விலையில் தேவையான மலர்களை ஏலம் எடுக்கலாம். இம்முறை ஏலத்தில் நுகர்வோர் பணத்தில் விவசாயின் பங்கு அதிகமாக இருக்கும்.

பன்னாட்டு மலர் ஏல மையத்தில், ஒரு நாளில் 5 லட்சம் மலர் தண்டுகள் ஏலம் விடலாம். மேலும், பன்னாட்டு மலர் ஏல மையத்தில் மலர்களை பெற்று, தரம் பிரிக்கும் பகுதி, முன் குளிரூட்டும் அறை, குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கிருஷ்ணகிரி ₹200 கோடி அந்நிய செலாவணி ஈட்டியது appeared first on Dinakaran.

Related Stories: