செல்போன் பறிப்பை தடுத்ததால் தொழிலாளி குத்திக்கொலை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே செல்போன் பறிப்பை தடுத்ததால் வடமாநில தொழிலாளி குத்தி கொல்லப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் புதிய கட்டிடம் அருகேயே தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இங்கு பணிபுரியும் பீகார் மாநிலம், சுபேல் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ்குமார் பஸ்வான் (20), சன்னிகுமார் பஸ்வான் (19) இருவரும் இரவு உணவு சமைப்பதற்காக அருகேயுள்ள கூத்தியார்குண்டு விலக்கில் உள்ள மளிகைக்கடையில் பொருள்களை வாங்கினர்.

பின்னர் இருவரும் கூத்தியார்குண்டு – ஆஸ்டின்பட்டி ரோட்டில் எய்ம்ஸ் அலுவலகம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த 3 நபர்கள், இருவரையும் வழிமறித்து செல்போனை பறித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த இருவரும் அந்த நபர்களை துரத்தி சென்று பிடித்து சண்டையிட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படவே, மர்ம நபர்கள் திடீரென கத்தியை எடுத்து சுபாஷ்குமார் பஸ்வான், சன்னிகுமார் பஸ்வான் இருவரின் மார்பில் குத்திவிட்டு செல்போன்களுடன் தப்பிச் சென்றனர்.

இவர்களில் சுபாஷ்குமார் பஸ்வான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சன்னிகுமார் பஸ்வான் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post செல்போன் பறிப்பை தடுத்ததால் தொழிலாளி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: