சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து 5 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது செல்லும்: மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கடந்த 1996-2001 தி.மு.க ஆட்சி காலக்கட்டத்தில் அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ரகுபதி ஆகியோர் மீது அடுத்து வந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்துகுவிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து அவர்களை நீதிமன்றங்கள் விடுதலை செய்தன.

இந்த நிலையில் துரைமுருகன் மற்றும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கோவிந்தன் மற்றும் ஆறுமுகம் என்பவர்களும், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ரகுபதி ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க தலைமையிலான அப்போதைய தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் குமணன் ஆஜராகி, இந்த வழக்கில் 2007ம் ஆண்டே சம்மந்தப்பட்ட நபர்களை உயர்நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது. அதேப்போல் மேல்முறையீடும் கால தாமதமாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கனவே உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தீர ஆய்வு செய்து தீர்ப்பு அளித்து விட்டது, மேலும் 1999-2001 காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு இதுவாகும். அதற்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது. குறிப்பாக இந்த வழக்கு மிகவும் காலதாமதமானது. எனவே இந்த வழக்குகளை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து 5 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது செல்லும்: மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: