×

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் சாகசம்; 3 வாலிபர்கள் கைது: 3 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு

ஓசூர்: ஓசூர் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையின்போது, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டே அதிவேகத்தில் பைக்கில் சென்று வீலிங் செய்து சாகசம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, காவல்துறையினர் வீலிங் செய்த வாலிபர்களை கைது செய்தனர். இதுபோன்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீலிங் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பேரில், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்த 6 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முகமது அப்ரார் (22), அபுபக்கர் (23), அட்கோ பகுதியை சேர்ந்த சையது முகமது அலி (19) என தெரிந்தது. அவர்களை கைது செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், 3 பேர் சிறுவர்கள் என்பதால், அவர்களது பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு 25 வயதாகும் வரை, ஓட்டுனர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரிடமிருந்து 6 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி பாபுபிரசாத் கூறுகையில், ‘ஓசூர் பகுதியில் சாலைகளில் வீலிங் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் சாகசம்; 3 வாலிபர்கள் கைது: 3 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : National Highway ,Hosur ,Bengaluru National Highway ,
× RELATED சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது