27 கடைகளுக்கு ₹1.35 லட்சம் அபராதம்

சேலம், நவ. 29: சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் அருகில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 27 கடைகளுக்கு ₹1.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், மாநகர பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் போலீசாருடன் இணைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 3183 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 88 கடைகளில் ₹64.91 லட்சம் மதிப்பிலான 4டன் தடைசெய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 86 கடைகளுக்கு₹4.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இம்மாதத்தில் போலீசாருடன் இணைந்து 29 பள்ளிகளுக்கு அருகில் உள்ள 833 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், ₹2.91 லட்சம் மதிப்பிலான 287 கிலோ புகையில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட 27 கடைகளுக்கு ₹1.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: வெளி மாநிலத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைபொருட்களை கடத்தி வந்து,பெட்டி கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 179 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 27 கடைகளுக்கு ₹1.35 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: