ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் கொள்ளை

கோவை: கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபலமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடை கட்டிடம் 4 தளங்கள் கொண்டதாகும். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நகைக்கடையின் கீழ்த்தளத்தில் 12 ஊழியர்கள் தங்கி உள்ளனர்.

ஒரு செக்யூரிட்டியும் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் முதல் மாடி மற்றும் 2வது மாடியில் நகைகள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் அனைத்தும் தரையில் சிதறிக்கிடந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த காட்டூர் போலீசார் கடையில் ஆய்வு செய்தபோது, நகைக்கடையின் சுவற்றில் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வென்டிலேட்டரை கழற்றி கடைக்குள் புகுந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளை நடந்த கடையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். கடைக்குள் இருந்த கேமராவில் நகைகளை ஒரே ஒரு நபர் கொள்ளையடித்துவிட்டு, தனது சட்டையை கழற்றி கேமராவை மறைத்துவிட்டு சென்றது பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏசி வெண்டிலேட்டரில் புனரமைப்பு பணி நடைபெற்றுள்ளது. அதற்கு வந்த நபர் யாராவது இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடையில் அலாரம் வசதியில்லாததால் கொள்ளையனை பிடிக்க முடியவில்லை.

The post ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: