உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க இடிபாடுகளின் பக்கவாட்டில் 52 மீ. துளையிடப்பட்டதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டி..!!

டேராடூன்: நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கக்கூடிய உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் பக்கவாட்டில் 52 மீட்டர் துளையிடப்பட்டதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி இன்று 17வது நாளாக நடைபெற்று வருகிறது. 41 தொழிலாளர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு வகையில் திட்டம் வகுக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பிளான் Aவில் அகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்றது. கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிக்கும் தருவாயில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு அதன் பாகங்கள் பைப் லைனுக்குள் சிக்கிக் கொண்டது.

இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட பாகங்களை வெளியேற்றிய பிறகு, நேற்று இரவு முதல் ஆட்களை வைத்து துளையிடும் பணியானது தொடங்கப்பட்டது. நேற்று இரவு 1.6 மீட்டர் வரை துளையிடப்பட்டது. இன்று காலை 2 மீட்டர் வரை துளையிடப்பட்டதாகவும், அதற்கேற்ற பைப் லைன்களும் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் ஆய்வுக்கு பின் என்னென்ன மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் தொழிலாளர்களை மீட்க இடிபாடுகளின் பக்கவாட்டில் 52 மீட்டர் துளையிடப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரம் தோண்டப்பட்டுள்ளதோ, அதே அளவுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் துளையிடும் பணி வேகமெடுத்துள்ள நிலையில், மீட்புப் பணியில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பது குறித்து இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் எனவும் கூறினார். ஆட்களை வைத்து துளையிடும் பணி இன்று இரவு அல்லது நாளை காலையில் முடிவடைந்துவிடும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

The post உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க இடிபாடுகளின் பக்கவாட்டில் 52 மீ. துளையிடப்பட்டதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: