38,700 எக்டேர் பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி

கிருஷ்ணகிரி, நவ.28: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு 38,700 எக்டேர் பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், சிறுதானிய திருவிழா நேற்று நடந்தது. விழாவை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:
நம்முடைய பாரம்பரிய சிறுதானியங்களான ராகி, சோளம், கம்பு, திணை, வரகு, குதிரைவாலி மற்றும் சாமை ஆகியவை ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளாகும். இன்றைய உலகில், சர்க்கரை நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் சிறுதானியங்களில் உள்ள சத்துப்பொருட்களும், புரதமும், நார் பொருட்களும் மற்றும் பூர்த்தியடையாத கொழுப்பும், உடலுக்கு மிகவும் நன்மை பயக்ககூடியாதாகும். அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிகளவு புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் பல உயிர்சத்துகள் நிறைந்துள்ளன. சிறுதானிய உணவுகள் இதயத்தை வலுவாக்குவதோடு, நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கிறது. மேலும், ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

சிறுதானியங்களை கர்ப்பிணி பெண்கள் உண்பதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டை கருவிலேயே களைவதற்கு உதவுகிறது. மேலும், நார்சத்து நிறைந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன. சீரான ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவே நல்லது என்று உணர்ந்து, அவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்து வந்தால் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம். நமது மாவட்டத்தில் ராகி 35 ஆயிரம் எக்டேர், சோளம் 3 ஆயிரம் எக்டேர், சாமை 400 எக்டேர், கம்பு 300 எக்டேர் என மொத்தம் 38 ஆயிரத்து 700 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறைகள், சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து பயிற்சிகள் வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் வாயிலாக, சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி, செயல்விளக்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எடுத்துள்ள முன்னெடுப்புகளை தொடர்ந்து, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவு வகைகளை, தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை, எதிர்கால சந்ததிகளிடையே ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் சரயு பேசினார்.

முன்னதாக, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல், ராகி, கம்பு, சோளம், வரகு, திணை, சாமை, கீரை வகைகள் மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சியை, கலெக்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 38,700 எக்டேர் பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி appeared first on Dinakaran.

Related Stories: