’சமூகநீதி காவலர் வி.பி.சிங்’கிற்கு சென்னையில் சிலை… முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் : அகிலேஷ் யாதவ் பங்கேற்பு!!

சென்னை: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அலகாபாத் நகரில் ராஜா தயா பகவதி – பிரதாப் சிங் ஆகியோரின் மகனாக 1931 ஜூன் 25ம் தேதி விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) பிறந்தார். பள்ளிப் படிப்பை டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியிலும், பின்பு புனே பெர்குஷன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். 1950ம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்திற்காக தனது நிலங்களை தானமாக வழங்கினார். வி.பி.சிங் எம்எல்ஏ, எம்பி, வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்ததை தொடர்ந்து, 1980ல் உத்திரபிரதேசத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறந்த முதல்வராக திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, 1984ல் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவிகளையும் வகித்தார். பின்பு, 1989ல் இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வதார பிரச்னையான காவிரி நீர் பிரச்னைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார். மேலும், கலைஞர் வி.பி.சிங்கை பற்றி குறிப்பிடும் போது “அரசியல் நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர்” என்று கூறினார்.

அந்தவகையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, பி.பி. மண்டல் குழுவின் பரிந்துரைையை ஏற்று 27 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி சமூக நீதிக் காவலராக விளங்கினார். இத்தகைய சிறப்புமிக்க முன்னாள் பிரதமர் சமூகநீதி வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் மனைவி சீதா குமாரி ஆகியோரும் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தனர். சமத்துவம் என்பது அதிகார பரவலாக்கம் என்ற வி.பி.சிங் கருத்துக்கள் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கும் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் வி.பி.சிங் அவர்களின் மகன்கள் அஜய் சிங், அபய் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

The post ’சமூகநீதி காவலர் வி.பி.சிங்’கிற்கு சென்னையில் சிலை… முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் : அகிலேஷ் யாதவ் பங்கேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: