ஈரோடு, நவ.27: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு வரத்தான 65.26 டன் காய்கறிகள் ரூ.22.79 லட்சத்திற்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதியில் இருந்து உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாகவும், தரமானதாகவும் கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலே மக்கள் கூட்டம் காய்கறிகளை வாங்க அலைமோதியது. இதில், ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 27.17 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.9 லட்சத்து 31 ஆயிரத்து 725க்கு விற்பனையானது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 65.26 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.22 லட்சத்து 79 ஆயிரத்து 613க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
The post ஈரோடு உழவர் சந்தைகளில் 65.26 டன் காய்கறி ரூ.22.79 லட்சத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.
