திருமலை: தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் இரவு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐதராபாத் அசோக் நகரில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:தனி தெலங்கானா மாநிலம் வந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்த இளைஞர்களுக்கு, மாநிலம் கிடைத்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர்களின் கனவுகள் நிறைவேறவில்லை. கேசிஆர் 10 ஆண்டுகால ஆட்சியில் தெலங்கானா இளைஞர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
வேலை நியமன அறிவிப்புகள் இல்லாதது, நீதிமன்ற வழக்குகள் மற்றும் தேர்வாணையத்தின் வினாத்தாள் கசிவு போன்றவற்றால் 30 லட்சம் வேலையில்லாத இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த ஓராண்டுக்குள் 2 லட்சம் பணி நியமனங்கள் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனத்திற்கான காலண்டர் தயாரித்துள்ளதை அவர்களிடம் காண்பித்தார். அதன் பிறகு ஐதராபாத்தில் புகழ்பெற்ற பிரியாணி கடைக்கு சென்று அங்கிருந்த பொதுமக்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.
The post காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தெலங்கானாவில் ஓராண்டுக்குள் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.
