புதுடெல்லி: நீதித்துறையில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கீழ் நிலையில் இருந்து உயர் நிலை வரை அவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் அகில இந்திய நீதித்துறை தேர்வு நடத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். கடந்த 1949ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அரசியலமைப்பு தினத்தையொட்டி, உச்சநீதிமன்ற வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கரின் 7 அடி உயர சிலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,‘‘இந்திய அரசியலமைப்பில் நீதித்துறை தனித்துவம் வாய்ந்தது.
நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினர் நீதித்துறைக்கு வரும் நிலையில், போட்டி தேர்வுகளின் மூலம் அகில இந்திய நீதித்துறை சேவையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் திறமையான இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய திறமையை வளர்க்க முடியும். நீதித்துறை அமர்வில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களை நாடு தழுவிய தேர்வுகளின் மூலம் தேர்வு செய்ய முடியும். இது போன்ற தேர்வுகளின் மூலம் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்களுக்கும் போதிய வாய்ப்புகள் வழங்க முடியும். ஆனால்,நீதி அமைப்பை வலுப்படுத்துவதற்கு எது சிறந்ததாக கருதுகிறீர்களோ அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்’’ என்றார். இதில் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில்,‘‘அரசியலமைப்பின் காரணமாக பாதகமான சூழ்நிலையில் இருந்து இந்தியா மீண்டது. அண்டை நாடுகளை விட இந்தியா சிறப்பாக இருப்பதற்கு அரசியலமைப்புதான் காரணம். அதனால்தான் வாழும் ஆவணமாக இந்திய அரசியலமைப்பு உள்ளது’’ என்றார்.
The post நீதித்துறையில் திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க அகில இந்திய தேர்வு நடத்த வேண்டும்: ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல் appeared first on Dinakaran.
