ஆலந்தூர், நவ.26: பரங்கிமலையில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ₹500 கோடி மதிப்பிலான அரசு நிலம் மற்றும் கட்டிடத்தை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். மவுண்ட் – பூந்தமல்லி சாலை பட்ரோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான ₹500 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 11,047 சதுர அடி நிலத்தை, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் சிலர் குத்தகைக்கு எடுத்து, குடியிருப்புடன் வசித்து வந்தனர். இதன் குத்தகை காலம் முடிந்த பின்னரும் அரசிடம் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில், வணிக நோக்கத்தில் அரசு நிலத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக வந்த புகாரின் பேரில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவிட்டார். இதையடுத்து, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் முரளி, ஆய்வாளர் செல்லப்பா ஆதியோரின் பாதுகாப்புடன் நேற்று, அந்த நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, குத்தகை வீட்டில் இருந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தாசில்தார் ஆறுமுகம், போலீஸ் உதவி கமிஷனர் முரளி கூறினர். அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர், ஒருநாள் அவகாசம் கொடுங்கள் என்றார். ஆனால் அதிகாரிகள் முடியாது, நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்றனர். எனவே, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, வருவாய் துறையினர் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே கொண்டுவந்து வைத்தனர். பின்னர் பொக்லைன் மூலம் அங்கிருந்த சுற்றுச்சுவர்களை இடித்து தள்ளினர். மேலும், மின்சார இணைப்பை துண்டித்தனர். பின்னர் வீட்டு கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் மதிப்பு ₹500 கோடியாகும்.
அந்த பகுதியில் இயங்கி வந்த வங்கி, தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு மட்டும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதுகுறித்து பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் கூறுகையில், ‘‘பரங்கிமலையில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ₹500 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதேபோல், பரங்கிமலை பட்ரோடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், சிலர் குத்தகை காலம் முடிந்த பின்னரும், அந்த நிலங்களை மீண்டும் அரசிடம் ஒப்படைக்காமலும், குத்தகை பணமோ, வாடகையோ செலுத்தாமல், வணிக நோக்கில் கட்டிடங்களை கட்டி பயன்படுத்தி வந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கடைகளுக்கு கடந்த 2ம் தேதி சீல் வைக்கப்பட்டு, சுமார் சுமார் ₹1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது. பரங்கிமலை பட்ரோட்டில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து இதுவரை ₹2,500 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் அரசு நிலத்தில் குத்தகை காலம் முடிந்தும், நிலத்தை ஒப்படைக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும்,’’ என்றார்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் ₹80 லட்சம் மதிப்பு இடம் மீட்பு
புளியந்தோப்பு திருவிக நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட 73வது வார்டு அம்மையம்மாள் தெருவில் வசித்து வருபவர் புனிதா. இவர், பொது வழியை ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் கழிப்பறைகளை கட்டியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 7ம் தேதி, குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியது. அதன்படி, திரு.வி.க.நகர் மண்டல அதிகாரி முருகன் தலைமையில் செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் ஜெரால்டு உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் 1004 சதுர அடி இடத்தில் கட்டிடத்தை அகற்றினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்கப்பட்ட இடம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் ₹80 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இனி இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post பரங்கிமலையில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ₹500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய் துறை நடவடிக்கை appeared first on Dinakaran.
