கீழ்வேளூர் அடுத்து கீழையூரில் சேறும் சகதியுமான குறுகிய சாலையை சீரமைக்க வேண்டும்

 

கீழ்வேளூர்,நவ.26: கீழ்வேளூர் அடுத்துள்ள கீழையூரில் சேறும், சகதியுமான குறுகிய சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரை அடுத்துள்ள சோழவித்யாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மூன்று தலைமுறைகளுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் சுமார் 40 ஆண்டு காலம் போராடி வருகின்றனர்.

இந்த 40 ஆண்டு காலத்திலும் மழைக்காலங்களில் குழந்தைகளும் முதியவர்களும் சேறும் சகதியுமான சாலையில் நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்கள் நடந்து செல்லும் பொதுபாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலை வசதி வேண்டுமென்று பலமுறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கீழத் தெருவில் சாலையின் ஒரு பகுதி, தனி நபருக்கு ஒருவருக்கு சொந்தமான இடமாக உள்ளது.

அதில் அரசு சாலை அமைக்க கூடாது என்று கூறி வருகிறாராம். சுமார் 20 மீட்டருக்கு சாலை தனிநபரிடம் இருந்து பெற்றால் சலை அமைத்து விடலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 40 ஆண்டுகளாக போராடிவரும் இம்மக்களுக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி கிடைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கீழ்வேளூர் அடுத்து கீழையூரில் சேறும் சகதியுமான குறுகிய சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: