தொடர்ந்து பெய்த மழையால் புளியஞ்சோலையாக மாறிய பெரம்பலூர் கல்லாறு

 

பெரம்பலூர்,நவ.26: பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் கல்லாறு புளியஞ்சோலையாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் உற்சாகமாக உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக இருக்கும் பச்சைமலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் பெய்த மழையால் கல்லாற்றில் பெருக்கெடுத்த தண்ணீர் அரும்பாவூர் பெரிய ஏரி, பூலாம்பாடி அருகே உள்ள கீரவாடி ஏரி ஆகியவற்றை நிரம்பி வழிய செய்தது. இதனால் 7 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பச்சை மலை மீது தொடர்ந்து கனமழை பெய்வதால் வேப்பந்தட்டை தாலுகா, மலையாள பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமுட்லு பகுதியில் கல்லாற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. மழை நின்ற பிறகும் மலை பகுதியில் பெருக்கெடுத்து வரும் ஊற்றுநீரால் இன்னும் சில வாரங்கள் தண்ணீர் செல்லும் நிலையுள்ளது. இதனால் சின்னமுட்லு கல்லாறு திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள புளியஞ்சோலை போல், பெரம்பலூர் மாவட்டத்தின் புளியஞ்சோலையாக மாறி உள்ளது.

தெளிந்து இளநீரைப்போல செல்லும் நீரில் குளித்து நீராட இளைஞர்கள் தினமும் படையெடுத்துச் செல்கின்றனர். விசுவக்குடி அணைக் கட்டுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மலைமீது பெய்த கனமழை காரணமாக லாடபுரம் அருகே கோனேரி ஆற்றிலும், மலையாளபட்டி, விசுவக்குடி அருகே வி.களத்தூரில் செல்லும் கல்லாற்றிலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆற்றோரங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுக என உயர்ந்து வருகிறது. லாடபுரம், வெங்கலம், ஒகளூர், வடக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post தொடர்ந்து பெய்த மழையால் புளியஞ்சோலையாக மாறிய பெரம்பலூர் கல்லாறு appeared first on Dinakaran.

Related Stories: