வேங்கைவயல் விவகாரம் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை: 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 10 பேருக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்த வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26ம்தேதி மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 119 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார், தற்போது வரை நீதிமன்றம் அனுமதி பெற்று 5 சிறார்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 31 நபர்களில், 10 பேருக்கு மட்டும் தற்போது உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர்.

இதற்காக வேங்கைவயல் இறையூர், காவிரிநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வழியாகவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 10 பேரும் வருகிற 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் 10 பேரும் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில், உண்மை கண்டறியும் சோதனைக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

The post வேங்கைவயல் விவகாரம் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை: 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: