பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி

 

பெரம்பலூர், நவ.25: பெரம்பலூரில் நீச்சல்குள சுத்திகரிப்பு எந்திரம் பழுதால் பெரம்பலூர் மாவட்ட பாரதியார் தின, குடியரசு தின நீச்சல்போட்டி அரியலூரில் நடைபெற்றது. 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் தின, குடியரசு தின பெரம்பலூர் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டுப் போட்டியான நீச்சல் போட்டி அரியலூர் நகரிலுள்ள கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியில் நேற்று (24ம் தேதி) நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குள் உள்ள மாவட்ட நீச்சல் குளத்திற்கான தண்ணீரை சுத்திகரிக்கும் (குளோரினேசன்) செய்யும் எந்திரம் பழுதடைந்து உள்ளதால், கடந்த ஒரு மாதமாக பெரம்பலூர் மாவட்ட நீச்சல் குளம், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியருக்குப் பயன்படாமல் உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்திற்கான பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல் போட்டி மட்டும் முதல்முறையாக நடப்பாண்டு அரியலூர் நகரிலுள்ள கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளி நீச்சல் குளத்தில் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியை பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து 14,17,19 வயது பிரிவுகளுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 47 வகையான பிரிவுகளில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்தும் 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநிலஅளவிலான போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர். போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

The post பெரம்பலூர் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: