ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியதால் பவானியில் போக்குவரத்து நெரிசல்

 

ஈரோடு,நவ.24:ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளதால் பவானி மற்றும் லட்சுமிநகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்வது வழக்கம். முன்னதாக முக்கிய கோயில்களுக்கு சென்று வழிபட்டுவிட்டு பின்னர் சபரிமலை செல்வார்கள். இந்நிலையில் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் கடந்த 10 நாட்களாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

தமிழக மட்டுமின்றி ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் பவானி பழைய பஸ் ஸ்டாண்டு,கூடுதுறை, காலிங்கராயன்பாளையம், லட்சுமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகின்றது. குறிப்பாக முகூர்த்தம் உள்ளிட்ட விஷேச நாட்களில் கடுமையான நெரிசல் நிலவி வருகின்றது. பவானி கூடுதுறை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் லட்சுமிநகர், காலிங்கராயன்பாளையம் ஆகிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக காலை நேரங்களில் லட்சுமிநகர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து காலிங்கராயன்பாளையம் வரை ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை நீடித்து வருகின்றது. லட்சுமிநகர் செக்போஸ்ட்டில் சித்தோடு போலீசார் பணியில் நியமிக்கப்பட்டிருந்தாலும் போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. இதே போல நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை என்ற புகார் இருந்து வருகின்றது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக காலையில் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியதால் பவானியில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: