பணம் வைத்து சூதாட்டம் கிளப் உரிமையாளர் உட்பட 21 பேர் கைது: ரூ.34 ஆயிரம் பறிமுதல்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கிளப் உரிமையாளர் உட்பட 21 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெருவில் ‘பிரண்ட்ஸ் கிளப்’ என்ற பெயரில் வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்த சத்தியா, பொழுதுபோக்கு கிளப் நடத்தி வந்தார். இங்கு, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் தலைமையில், கொருக்குப்பேட்டை ஆய்வாளர் யுவராஜ் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கிளப்பில் இருந்தவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சூதாட்ட கிளப் நடத்தி வந்த சத்தியா (53), அவரது மகன் சுதாகர் (29), சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மற்றும் அங்கு வேலை பார்த்த 6 பேர் என மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 21 பேரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த கிளப்பில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். வெளி ஆட்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இங்கு ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 20 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு டேபிளுக்கு 350 ரூபாய் வீதம் விளையாடி உள்ளனர். மொத்தம் அங்கிருந்து 264 டோக்கன் மற்றும் 25 சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொழுதுபோக்கு என்ற பெயரில் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக அதிக பேர் இங்கு வந்து சென்றதாகவும், லட்சக்கணக்கான பணம் வைத்து அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post பணம் வைத்து சூதாட்டம் கிளப் உரிமையாளர் உட்பட 21 பேர் கைது: ரூ.34 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: