இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அவ்வப்போது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி தகராறுகள் போன்ற பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் தொடர் விபத்துகள், கடலோர மீனவர்கள் விபத்துகள் மற்றும் உயிர் சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்க சூனாம்பேடு அல்லது செய்யூர் காவல் நிலையம் செல்கின்றனர்.

இந்த இரண்டு காவல் நிலையங்களும் 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை தொலைவு கொண்டுள்ளதால் புகார் அளிக்க செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அலைபேசி மூலம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பவ இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் காவல் துறையினரும் செல்ல முடியாதநிலை உள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இடைக்கழிநாடு பேரூராட்சியின் மைய பகுதியான கடப்பாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, இப்பேரூராட்சி மக்கள் நலனை கருத்தில் கொண்டு இடைக்கழிநாடு பேரூராட்சிக்கென புதிய காவல் நிலையம் உருவாக்கி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: