மணவாழ்க்கை அமைத்து தருவார் மணக்கரைநாதர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தென்பாண்டி சீமையை ஆண்டு வந்தான் உக்கிரவழுதி பாண்டியன். அவன் காலத்தில் தாமிரபரணி ஆறு பெறுக்கெடுத்து ஓடியது. கரைகளை கடந்து ஊருக்குள் நுழைந்தது. இதனால், குடிமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொது மக்களும், படை வீரர்களும் மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் தன் சேனைப்படை வீரர்களுடன் தாமிரபரணி கரையில் முகாமிட்டார். படைவீரர்களையும், பொதுமக்களையும் திரட்டி வந்து தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

ஆனால், அவனின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவன் மனமோ இறைவன் மீது நாட்டம் கொண்டது. “இறைவா, என் மக்களை தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற நீதான் அருள் புரிய வேண்டும்’’ என வேண்டிக் கொண்டான். ஒரு நாள், தாமிரபரணி கரை ஓரத்தில் லிங்கரூபத்தில் இறைவனை கண்டான். அந்த லிங்கத்தின் முன்பு மண்டியிட்டான், “தாமிரபரணியை தடைபோட என்னால் இயலவில்லை.

ஆனால், இறைவா உன்னால் முடியும்” என லிங்கநாதரை தீர்க்கமாக பற்றிக் கொண்டான். பல நாள் அங்கேயே தங்கினான். தினமும் தாமிர பரணி ஆற்றில் இருந்து தானே நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான். மலர்களை சூட்டி அலங்காரம் செய்தான். பல்வேறு, ஆராதனைகளையும் செய்தான். கண்ணீர்விட்டு அழுதான். “எத்தனையோ முயற்சி செய்கிறேன் இறைவா, என்னால் இந்த கரையை தடுத்து மக்களை காப்பாற்ற இயலவில்லையே”. என குமுறினான்.

இறைவனுக்கு மன்னன் மீது இரக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் அதிகாலை மன்னன் எழுந்து தாமிரபரணி ஆற்றுக்கு சென்று தானே நீரெடுத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தான். வில்வ மலர்களால் அர்ச்சனை செய்தான். அப்போது இறைவன், அசரீரியாக பேசினார். “உக்கிரவழுதி! உன் பக்தியை மெச்சுகிறேன். மக்களுக்காக நீ.. படும் அரும்பாடு என்னை கவர்ந்துவிட்டது. இனிமேல் தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியை என்னை நம்பி செய். எம் அருளால் உமது முயற்சி வெற்றியாகும்” என்று அருளினார். மன்னனும் அகமகிழ்ந்தார். இறைவனை வணங்கி, தன் படை வீரர்களைத் திரட்டி, தாமிரபரணி நதி நீர் ஊருக்குள் நுழையாதபடி கரை அமைக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டார்.

ஊர் முழுக்க தண்டோரா போட்டார், மன்னன். இறைவன் உத்தரவு கிடைத்து விட்டது. இனி என்ன? என ஊர் மக்கள் உற்சாகமாக திரண்டனர்.இறைவனும், ஒரு குதிரை வீரனாக மக்களோடு மக்களாக தோன்றினார். பலவகையான படை வீரர்களை உருவாக்கினார். மன்னர், படையோடு சிவபெருமான் படையும் தாமிரபரணி கரையில் திரண்டனர். நதிக்கரையில் மணலால் கரை அமைத்தனர். மிக வேகமாக வேலை நடைபெறுகிறது. மன்னனுக்கு சந்தோஷம். நம் மக்களிடம் இவ்வளவு திறமையா? என எண்ணி வியந்தான். ஆனால் இது இறைவனின் திருவிளையாடல் என அவன் அப்போது அறியவில்லை.

வேலைகள் முடிந்தது. ஒரு நாள் லிங்கத்தின் முன்னால் வந்து மன்னன் இறைவனுக்கு நன்றி கூறி நின்றான். அப்போது குதிரை வீரனாக இருந்த சிவபெருமான் லிங்கத்துக்குள் சென்று மறைந்தார். அப்போதே அவருடன் வந்த சேனைகளும் மறைந்தனர். “ஆகா.. இதுவரை நமக்கு உதவி செய்தது சிவபெருமானும், அவரின் சேனைகளுமா?” என சிவபெருமானின் அருளை எண்ணி மகிழ்ந்தான் மன்னன்.

லிங்கத்தின் முன் வந்து நின்றார். “சிவபெருமானே! மதுரையில் புட்டுக்கு மண் சுமந்த இறைவா. எங்கள் நலன் காக்க இங்கேயும் வந்து மண் சுமந்து கரையை பலப்படுத்திவிட்டாயே. என்னே உன் அருள். எப்படி மதுரையில் மீனாட்சி யுடன் அமர்ந்து அருள் புரிந்தீரோ, அதுபோலவே இங்கேயும் அமர்ந்து அருள் புரிய வேண்டும் சொக்கநாதா” என்று மனம் கசிந்து உருகி வேண்டி நின்றான். இவ்வூர் இனி தென்மதுரையாகவே விளங்கட்டும் என அருளினார் இறைவன். இறைவன் உறைந்த லிங்கரூபத்துக்கு ஆகம விதிப்படி கோயில் அமைத்தார், மன்னன்.

அவருக்கு சொக்கநாதர் என பெயர் வைத்தார். தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டான். மக்களும் தவறாமல் வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்ற தங்களுக்காக மண் சுமந்த சிவபெருமானை வணங்கி நின்றனர். பிற்காலத்தில் தெற்கு நோக்கி மீனாட்சியை பிரதிஷ்டை செய்து வணங்கினர். சுரதேவர், தட்சிணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் அதிகார நந்தி என ஆலயத்தில் அனைத்து தெய்வங்களும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.

மன்னனின் வேண்டுகோளை ஏற்று சிவனே மணலால் கரை அமைத்ததால் இத்தலம், “மணல்கரை” எனப் பெயர் பெற்றது. பின் அதுவே, மணக்கரையாக மருவியது. இக்கோயில், 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். உக்கிரவழுதி மன்னனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் கொங்குராயர் என்ற மன்னரால் விரிவுபடுத்தப்பட்டது. திருமணத் தடை, நவகிரகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து, பயனடைந்து வருகின்றனர்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் சிவபெருமானால் அமைக்கப்பட்ட மணல் கரையில் உள்ள ஆற்று மணலை சிறிது எடுத்துக் கொண்டு போய் தங்களின் புதிய கட்டடத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்த கோயிலில் உள்ள தூணில் அனுமன் வாலில் மணியுடன் காணப்படுகிறார். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதுபோல் உள்ள அனுமனை வணங்கினால் தீராத பிரச்னைகளும் தீருகிறது என ஜோதிடர்கள் பரிகார தலமாக இத்தலத்தினை குறிப்பிடுகிறார்கள். அனுமன் மணக்கரை சிவன் கோயில் கல்தூணின் இருப்பது, இவ்வூரை ராமாயணத்தில் கிஷ்கிந்தை காண்டம் நடந்த ஊர் என ஊர்ஜிதப் படுத்த காரணமாகிறது.

“தாமிரபரணியில் கிஷ்கிந்தை காண்டமா?”. என கேட்டால் அது உண்மை என்பது போலவே இவ்வூர் மக்கள் வணங்கும் கோயில் மூலம் விடை கிடைக்கிறது. வாலியை மறைந்து இருந்து ராமபிரான் தாக்கிய இடமாக மணக்கரை கள்ளவாண்டன் சுவாமி கோயில் போற்றப்படுகிறது. இவ்விடத்தில் இருந்து பிடிமண் எடுத்து அருகில் உள்ள ஊரிலும் கள்ளவாண்ட சுவாமி வணங்கப்பட்டு வருகிறது.

மணக்கரை, ஆறாம்பண்ணை, முத்தாலங்குறிச்சி, ஸ்ரீராமன்குளம், நடுவக்குறிச்சி, கருங்குளம் கள்ளிகாடு, கிளாக்குளம், பெருமநேரி, அரசர்குளம், வல்லகுளம், வெட்டிகுளம், தீராத்தி குளம், ஆதிச்சநல்லூர், பரசாங்கு நல்லூர், பேட்துரைசாமிபுரம், எஸ்.என்.பட்டி உள்பட சில கிராமங்களில் மட்டுமே இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் கள்ளவாண்ட சுவாமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாலிக்கு பயந்து சுக்கிரீவன் மேற்குதொடர்சி மலையில் உள்ள அத்ரி மலையில் இருக்கின்ற அத்ரிமுனிவரின் தபோவனத்தில் அடைக்கலம் புகுகிறான். வாலி அத்ரி மலைக்குள் நுழைந்தால், அவனது தலை வெடித்து விடும் என சாபம் பெற்றிருந்தான். எனவே அவனால் அங்கு சென்று சுக்கிரீவனை தாக்க இயலவில்லை. அனுமன் சிபாரிசு பேரில் ராமபிரான், சுக்கிரீவனுக்கு உதவி செய்ய ராமர் முன்வந்தார்.

வாலியை எளிதாக வெல்ல முடியாது. அவரை எதிர்த்து நின்றவர்களின் பலம் அனைத்தும் அப்படியே வாலியிடம் வந்து விடும் எனவே அவரை சாதாரணமாக யாராலும் வெல்ல முடியாது. ராமர் அவரை வதம் செய்வதற்காக வாலியையும் சுக்கிரீவனையும் மோதவிட்டு மறைந்து நின்று தாக்கிவிடுகிறார். குற்றுயிரும் குறை உயிருமாக கிடக்கும் வாலி, ராமனை பார்த்து, “கள்ளத்தனமாக என்னை வென்றுவிட்டாயே ராமா. கள்ளராமா” என அழைத்த காரணத்தினால் “கள்ள ஆண்டவர்” என அழைக்கப்பட்டு, அதுவே மருவி கள்ளவாண்டன் என அழைக்கப்படுகிறார்.

வாலியை கொன்றதற்கு அடையாளமாக கோயில் முன்பு கழுமரம் உள்ளது. கோயிலில் நடைபெறும் கொடை விழாவில், வேட்டை பானை போடுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கொதிக்கும் கஞ்சியை சாமியாடுபவர்கள் தலைவழியாக ஊற்றுவதும், அதனால் அருகில் உள்ளவர் மீது சூடு பட்டாலும் சாமியாடுபவர்கள் மீது எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கள்ளவாண்ட சாமி ஆடுபவர்கள் தன்மீது கொதிக்கும் சோற்றை போட காரணம், வாலியை கொன்ற பாவத்தின் தோஷம் நீங்க என்று மக்கள் நம்புகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் கள்ளவாண்ட சுவாமி ஆடும் நபரை அனுமன் சாமி ஆடுபவர்கள் கட்டிபிடித்து, “வாலியை வதம் செய்ய உம்மிடம் சுக்கிரீவனை கூட்டி வந்ததே நான்தான் எனவே, அந்த பாவத்தில் எனக்கும் பங்கு உண்டு” என்பது போலவே கொதிக்கும் கஞ்சியை தனது மீது ஊற்றி கொள்வார்கள். இந்த விழா மணக்கரை சுற்றுப் பகுதியில் இங்கிருந்து பிடிமண் எடுத்து சென்ற ஊர்களில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

மணக்கரையில் மலைபார்வதி அம்மன் கோயில் மிகவும் விசேஷமானது. இந்த அம்மனுக்கு தை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை கொடைவிழா நடத்துவார்கள். மலை பார்வதி அம்மனை வணங்க சுமார் 3 கிலோ மீட்டர் மலையில் கரடுமுரடான பாதை வழியாக பக்தர்கள் நடந்து சென்று பொங்கல் வைத்து, வணங்கி நிற்கிறார்கள். அரசுவேலை கிடைக்க அம்மனை வேண்டி நிற்கிறார்கள். வேலை கிடைத்தவுடன் நன்றி செலுத்த கண்ணீர் மல்க, மீண்டும் மலையேறி வந்து மக்கள் நிற்பதை காணலாம்.

இதுபோல, சிறப்புடைய இவ்வூரில் அமைந்து இருக்கும் மணக்கரை நாதர் மீனாட்சி சமேத சொக்கநாதராக இருப்பதால், இங்கு வந்து தொடர்ந்து வணங்கி வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கிறது. மணவாழ்வில் பிரச்னை இருந்தால்கூட பிரிந்த தம்பதிகள் ஒன்றாய் கூடுகிறார்கள். இங்கு நடைபெறும் திருக்கல்யாணத்துக்கும், கொங்கு ராயகுறிச்சியில் உள்ள சிவன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்துக்கும் ஆறாம்பண்ணை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வருவது கொங்குராயர் மன்னர் காலத்திலேயே நடந்து வந்துள்ளது. தற்போது அனைத்து திருவிழாக்களும் நிறுத்தப்பட்டு, ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் கோயிலாக உள்ளது. தற்போது கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது.

தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்து, மீண்டும் பழைய காலங்களை போல பூஜைகள் விழாக்கள் நடைபெற பக்தர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.நடை தினமும் காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை திறந்து இருக்கும்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள மணக்கரைக்கு நெல்லை தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்து நெல்லை திருச்செந்தூர் சாலையில் உள்ள கருங்குளத்தில் இருந்தும் ஆட்டோ மற்றும் பஸ் வசதி உண்டு.

தொகுப்பு: முத்தாலங்குறிச்சி காமராசு

The post மணவாழ்க்கை அமைத்து தருவார் மணக்கரைநாதர் appeared first on Dinakaran.

Related Stories: