உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கு சிறப்பு முகாம்

சேலம், நவ.23: தமிழகத்தில் உணவு வணிகம் புரிபவர்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருசில உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறப்படாமல் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ேசலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில், மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வருடத்திற்கு ₹12 லட்சத்திற்கு கீழ் வரவு-செலவு புரிபவர்கள் ₹100 செலுத்தி பதிவு சான்றிதழும், வருடத்திற்கு ₹12 லட்சத்திற்கு மேல் வரவு-செலவு புரிபவர்கள் ₹2,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர விண்ணப்ப கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1, ஆதார் அடையாள அட்டை நகலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற ஆதார் அடையாள அட்டை நகல், மின்சார ரசீது அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம், இது தவிர உணவு பாதுகாப்பு உரிமம் பெற விரும்பும் ஹோட்டல், ரெஸ்டாரண்ட், கேன்டீன், பேக்கரி தயாரிப்பாளர்கள் ஆகியோர் கூடுதலாக தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறுவதற்கு தேவையான கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டி உள்ளது. எனவே உணவு வணிகர்கள் ஜிபே, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த வேண்டும். வரும் 30ம் தேதி வரை இந்த முகாம் நடக்கவுள்ளதால், வணிகர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: