ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்: கற்றலின் கேட்டல் நன்று!

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ண பூர மனோஹரா

நாம் இப்போது கேசம் முதல் பாதம் வரை அம்பிகையின் வர்ணனையை பார்த்துக் கொண்டு வருகின்றோம். இதற்கு முன்னே சொன்ன இரண்டு நாமங்களும் அம்பிகையின் மூக்கையும், அந்த மூக்கில் அணிந்து கொண்டிருந்த ஆபரணமான மூக்குத்தியையும் பார்த்தோம். இதற்கு அடுத்தபடியாக இந்த நாமாவானது காதை வர்ணிக்கின்றது. அந்த காதை வர்ணிக்கும்போது நேரடியாக காதிற்கு செல்லவில்லை. எப்படி நாசியை சொல்லும்போது சம்பக புஷ்பத்தை உவமையாகச் சொல்லி, அந்த மூக்கைச் சொன்னார்களோ அதுபோலவே இங்கேயும் ஒரு புஷ்பத்தை சொல்கிறார்கள்.

ஆனால், உவமையாகச் சொல்லவில்லை. காதைப்பற்றிச் சொல்லும்போது அந்த காதின் ஓரத்தில் அம்பாள் அணிந்திருக்கும் கதம்ப புஷ்பம் என்று சொல்லிச் செல்கின்றது, இந்த நாமம்.
இந்த கதம்ப மஞ்சரி என்பது கதம்ப புஷ்பம். இதை நாம் கதம்பமென்றும் கடம்பமென்றும் சொல்லலாம். மதுரைக்கே கடம்ப வனம் என்றுதான் பெயர். மஞ்சரி என்றால் கொத்து என்று அர்த்தம். கதம்ப மலர்களின் கொத்தை இரண்டு காதுகளிலும் சொருகியிருக்கிறாள் என்று இந்த நாமம் சொல்கின்றது. இது அலங்காரத்திலுள்ள ஒரு நுணுக்கம். எப்படியெனில், கூந்தலில் பூ வைத்துக் கொள்வதென்பது ஒருவித அலங்காரம்.

இங்கு கூந்தலுக்கும் காதுக்கும் நடுவிலே புஷ்பங்களை சொருகிக் கொள்ளுதல் என்பது அதுவொருவிதமான அலங்காரம். அதாவது காதுக்கு மடலுக்கு மேலேயும் கூந்தலுக்கு கீழேயும் சொருகிக் கொள்வது. இதற்கு முன்பு அம்பிகையானவள் கூந்தலிலேயே நான்கு விதமான புஷ்பங்களை சொருகிக் கொண்டிருக்கின்றாள். சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்தி இந்த புஷ்பங்களையெல்லாம் நேரடியாகவே கூந்தலில் சூடியிருந்ததை சொல்லியிருந்தார்கள். இப்போது காதுக்கும் கூந்தலுக்கும் நடுவே புஷ்பத்தை அம்பாள் சொருகிக் கொண்டிருக்கிறாள்.

இதில் ஏன் கதம்ப புஷ்பம் எனில், ஸ்ரீசக்ரத்தில் ஸ்ரீநகரத்தில் பிந்து ஸ்தானத்தில் அம்பாள் இருக்கும்போது அந்த ஒன்பது ஆவரணங்களுக்கு முன்னால் நிறைய தோட்டங்கள் இருக்கும். நவரத்தின பிராகாரங்கள் இருக்கும். இவை எல்லாமே நமக்கு ஸ்ரீநகரத்தினுடைய வர்ணனையில் லலிதோபாக்கியானம் கூறுவது. இதில் கதம்ப மலர்களாலேயே சூழப்பட்ட தோட்டங்கள் இருக்கும். அதற்குப் பிறகு கற்பக விருட்சங்கள் சூழ தோட்டங்களிருக்கும். பிறகு, சந்தன மரங்கள் சூழ்ந்த தோட்டங்கள். இப்படி ஆறுவிதமான தோட்டங்கள் உள்ளன. இந்த ஆறுவிதமான தோட்டங்களை தாண்டி, நவரத்தின பிராகாரங்கள் இருக்கின்றது.

மற்ற தேவதைகள் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் தாண்டிதான் மகாமேரு இருக்கக்கூடிய இடத்திற்கு போக முடியும். அந்த கடம்ப விருட்சங்கள் நிறைய இருப்பதால், அந்த விருட்சங்கள் அனைத்துமேஅம்பாளை அடைய விரும்பியதாலும் அம்பாளே அந்த மலர்களை எடுத்து சூடிக் கொண்டிருக்கிறாள். இந்த நாமத்தையே நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் வேறொரு நுட்பமான விஷயம் தரிசனமாகின்றது. கதம்ப மஞ்சரீ க்லுப்த கர்ணபூர மனோஹரா என்பதில் கர்ணபூர மனோஹராஞ். அந்த புஷ்ப மஞ்சரியை நாம் காணும்போது நம்மை அது ஈர்க்கின்றது. அந்த கொத்து கொத்தான பூக்கள் சூடியிருப்பதால் அந்த செவியானது நிறைவாக விளங்குகின்றது கர்ண பூரம் என்றால் செவியின் நிறைவு என்று பொருள்.

எப்போது ஒரு செவி நிறையும் அதையும் தெரிந்து கொள்வோம் கொஞ்சம் பொறுமையாக வாருங்கள். இதற்கு முன்னால் உள்ள நாமங்களில் ஞானானுபவத்தைத்தான் பார்த்துக் கொண்டே வருகின்றோம். ஞானானுபவம் எப்படி கிடைக்கின்றது. அந்த ஞானானுபவத்தால் கிடைக்கக்கூடிய ஆனந்தம் எப்படி இருக்கின்றது. இப்போது இந்த இடத்தில் ஞானப் பாதையில் போகின்ற சாதகனின் செவி எப்பொழுது நிறைகிறதெனில், இந்த ஞானத்தினுடைய முதல் படியாகிய ஸ்ரவணத்தை எப்போது அவன் கைக்கொள்கிறானோ, அந்த ஸ்ரவணத்தை அவன் கைக்கொள்ளும்போது அந்த ஞான மொழிகளால் அவனுடைய செவி நிறைகின்றது.

ஏனெனில், ஔவைப்பாட்டியே கற்றலின் கேட்டல் நன்று என்று சொல்லியிருக்கிறாள். மாபெரும் ஞானியரின் அனுபூதியிலிருந்து வரும் வாக்கியங்கள் அனைத்துமே நேராக செவிப்பறைக்குள் சென்று அங்கேயே தங்கி விடாமல் இருதயத்தை திறக்கின்றது. எனவேதான், ஸ்ரவணம், கேட்டல், learning க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னால் வரையிலும் தேவையில்லாததை கேட்டுக் கேட்டு மனதை உலகியலில் செலுத்திக் கொண்டிருந்தவன், இப்போது ஞான மார்க்கத்திற்கு வரும்போது அவன் கேட்கக் கூடிய அனைத்துமே ஞானத்தை சுட்டும் விஷயங்களாக உள்ளன.

அப்படி கேட்டுப்பழகியவனின் மனமும் வேறு எதிலும் பெரிய சுகங்கள் இருப்பதாக தெரியாது, இதிலேயே மூழ்கி தன்னை மறந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்படி தன்னுடைய செவியை நிறைத்துக் கொள்கின்றான். இப்படி நிறைத்துக் கொள்வதால் அவனுடைய மனம் உலகியலுக்குச் செல்லாமல் இந்த ஞான விஷயங்களிலேயே லயிக்கின்றது. இப்படி ஞான விஷயங்களின் நுட்பங்களையும் அழகியலையும் கேட்பதையே அவனுடைய செவி விரும்புகின்றது. ஞான, வேதாந்த, ஜீவன் முக்தி, குருவினுடைய சூட்சும விஷயங்களை நோக்கி அந்த ஆத்ம சாதகன் இன்னும் இன்னும் தீவிரமாக கேட்டுக் கொண்டே இருக்கின்றான்.

ஸ்ரவணம் என்கிற கேட்டல் அதிதீவிரமாக மாறுகின்றது. இந்த நிலையைத்தான் அம்பாள் சூடியிருக்கக் கூடிய கதம்ப மலர்கள் காண்பித்துக் கொடுக்கின்றன. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், அது எவ்வளவு பெரிய மார்க்கமாக இருந்தாலும் அதன் முதல் படி ஸ்ரவணம்தான். காதினால் கேட்பது. உண்மையான ஸ்ரவணம் எப்படி செவியை நிறைக்கும் தெரியுமா? உண்மையாக கேட்பது என்பது என்ன தெரியுமா?

குருவின் வாக்குகளை எந்த வித அபிப்ராயமும் இல்லாமல் கேட்டல். அவர் பேசும்போதே இது சரி, இது தவறு என்று எந்த அபிப்ராயமும் இல்லாமல் வெறுமே கேட்டல். அது இன்னொரு தீவிரமான விஷயம். அந்த நிலையில் குருவினால் சொல்லப்படும் ஞான விஷயம் நேரடியாக காதின் வழியாக மனதினால் அலசப்படாமல் இருதயத்தை அடைகின்றது. இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவெனில், ஞான மார்க்கத்திற்கும் முதல்படி ஸ்ரவணம்தான்.

பக்தி மார்க்கத்தை எடுத்துக் கொண்டால் நவவித பக்தியில் முதலில் வருவது ஸ்ரவணம்தான். அடுத்து கீர்த்தனம், அப்புறம்தான் ஸ்மரணம். ஞான மார்க்கத்தில் ஸ்ரவணம்,(கேட்டல்) மனனம், நிதித்யாசனம். அப்போது ஞானத்திற்கும் பக்திக்கும் எல்லாவற்றிற்கும் முதல்படியாக இருப்பது ஸ்ரவணம். அப்பேற்பட்ட ஸ்ரவணத்தினுடைய முக்கியத்துவத்தை இந்த நாமா நமக்குக் காட்டுகின்றது.

பாகவதத்தில் சுகப் பிரம்மத்தின் வார்த்தைகளை மட்டுமே பரீட்சித்து கேட்டு ஞானானுபவம் பெற்றான். இந்த லலிதா சஹஸ்ரநாமம் முழுவதும் எப்படியெல்லாம் அந்த அம்பிகை ஞானத்தை அருள்கின்றாள் என்று காட்டிக் கொண்டே செல்கின்றது. நாம் வாழும் இந்த உலகிற்கான எந்தப் பயனும் இல்லையா என்று நமக்குள் எண்ணம் வரலாம். ஞானத்தையே அளிக்கக் கூடிய ஒருவளால் நீங்கள் கேட்கக்கூடிய சாதாரண விஷயங்களெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு கட்டத்தில் அவள் அளிப்பது மட்டுமே சரியாக இருக்கும். நீங்கள் கேட்பது பெரும்பாலானவை தவறாகவே இருக்கும். இது நாம் நன்கு பக்குவமுற்று இருக்கும்போது புரியும்.

இந்த நாமத்திற்கான கோயில்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுன்ற இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இக்கோயிலுக்கு சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் போகலாம். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை காதில் உபதேசித்த தலம். அதனாலேயே இங்குள்ள இறைவனுக்கு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என்றும் அம்பாளின் நாமத்தை பாருங்கள். நாம் மேலே சொன்ன பூக்கள் போல பெயரிலேயே புஷ்பலதாம்பிகை என்று வருகின்றது.

இத்தலத்திலுள்ள இறைவன் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி என்றழைக்கப்படுகிறார். இத்தலத் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் கௌரி தீர்த்தமாகும். இத்தலத்தின் மரம் வதரி (இலந்தை) ஆகும். வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), அம்பிகை முதலியோர் இறைவனை வழிபட்டிருக்கின்றார்கள்.

புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது. இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் = ஓமமாம்புலியூர் எனப்பட்டது.

(சம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று வருகிறது. இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.) இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம். ஓமம் – வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் கூறுவர்.

The post ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்: கற்றலின் கேட்டல் நன்று! appeared first on Dinakaran.

Related Stories: