ஒடுக்கப்பட்டோருடன் இயேசுவின் பயணம்!

கிறிஸ்துவம் காட்டும் பாதை

இயேசு தேடிச் சென்ற மக்கள் யார்? எப்படிப்பட்ட மக்கள் மீது அவரின் கவனம் திரும்பியது? ஆண்டவர் இயேசுவின் தனிப்பட்ட கரிசனைக்கும், பரிவுக்கும் உரித்தான மக்களைக் குறித்த நற்செய்தி நூல்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவை ஏழைகள், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், பசியுற்றோர், பாவிகள், துன்புறுத்தப்படுவோர், சிறைப் பட்டோர், சிறியோர், குழந்தைகள், இஸ்ரயேலில் தவறிப்போன ஆடுகள். இயேசு இவர்களை ‘‘ஏழைகள்’’, ‘‘எளியோர்’’, ‘‘சிறியோர்’’ என்று அழைக்கிறார். ஆனால் பரிசேயரோ இவர்களை ‘‘பாவிகள்’’ என்றும் ‘‘எதற்கும் பயன்படாதோர்’’ என்றும் அழைத்தனர்.

ஆண்டவர் இயேசு வாழ்ந்த பாலஸ்தீன சூழலில் ‘‘ஏழைகள்’’ என்ற சொல் ‘‘பொருளாதார நிலையில் வறியவர்கள்’’ என்பதை மட்டும் குறிக்கவில்லை. நோயினால் அல்லது உடலில் உள்ள ஊனத்தால் பாதிக்கப்பட்டு வேலை செய்து பிழைக்க வழி அறியாமல், உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்காமல் பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டோர் இந்த ஏழைகள். ஆக பார்வையற்றோர், முடவர்கள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் போன்றோர் பிச்சைக்காரர்களாகத் தான் வாழ்ந்தார்கள். கைம்பெண்களும், அநாதைகளும் ஆதரவின்றித் தவித்தார்கள். அவர்களைப் பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் பிறரிடம் ைகயேந்தி உண்ணும் நிலையிலேயே இருந்தனர்.

பாலஸ்தீனிய மக்களின் மனநிலைப்படி உணவையும், உயிரையும்விட மானமும், கவுரவமும் அதிக மதிப்பு வாய்ந்தது. பிறரது கையை எதிர்பார்த்து வாழாமல் பிறருக்கு கொடுக்கும் அளவுக்கு ஒருவர் உயர வேண்டுமென்றால் பணம், கல்வி, அந்தஸ்து, அதிகாரம் தேவை. ஆனால், இது எதுவுமின்றி பிறரை எதிர்பார்த்து வாழ்ந்த ஏழைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இல்லை. அவர்கள் மனிதர்களாகவே மதிக்கப் படவில்லை. முனித மாண்பும், சக மனிதருக்கு தர வேண்டிய உரிமையும் இவர்களுக்கு மறுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட மக்களை, மனித மாண்பும், உரிமையும் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோரைத் தான் இயேசு தேடிச் சென்றார். சமுதாயத்தில் மிகத் தாழ்ந்தவராக கருதப்படுவோரோடு இயேசு பழகினார், உறவாடினார். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதற்கு காரணம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆண்டவர் காட்டிய பரிவு.

‘‘இயேசு… பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்’’ (மத்தேயு 14:14) ‘‘திரண்டிருந்த மக்களைக் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல் அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.’’ (மத்தேயு 9.36, மாற்கு 6:34). தொழுநோயாளி மீது இயேசு பரிவு கொண்டார் (மாற்கு 1:41). அதுபோலவே பார்வையற்றோர் மீதும் (மத்தேயு 20:34) பசியுற்ற மக்கள் கூட்டத்தின் மீதும் பரிவு கொண்டார் (மாற்கு 8:20).

ஆண்டவர் இயேசுவின் திருப்பணியின் பயணம் ஒடுக்கப்பட்ட மக்களோடும், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களோடும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களோடும்தான் அமைந்திருந்தது. அப்படிப்பட்ட வாழ்விழந்த மக்களுக்கு வாழ்வு கொடுக்கவே தமது வாழ்வை இழந்தார். ஆண்டவர் இயேசு பயணித்த அந்த விடுதலை பயணத்தை நாமும் தொடர்ந்து பயணிப்போம்.

பேராயர் தே. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் – மதுரை

The post ஒடுக்கப்பட்டோருடன் இயேசுவின் பயணம்! appeared first on Dinakaran.

Related Stories: