ஆளுநர் மாளிகை முன்பு 3 நாள் போராட்டம்

 

ஈரோடு, நவ.21: ஏஐடியுசி ஈரோடு மாவட்ட குழுக் கூட்டம் ஈரோட்டில் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகி சந்திரசேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தில் மூத்த தலைவர்கள் சங்கரய்யா, சுந்தரராஜன் ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செயலாளர் சின்னசாமி, ஏஐடியுசி தேசிய, மாநில முடிவுகள் பற்றி விளக்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முன்பு இரவு பகல் பெருந்திரள் அமர்வு போராட்டங்கள் நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஏஐடியுசி சார்பில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்த வேண்டும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு வட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சித்தையன் நன்றி கூறினார்.

The post ஆளுநர் மாளிகை முன்பு 3 நாள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: