பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், நவ.18: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.ஜம்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முரளிதர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் செந்தில் வளவன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், பல்வேறு சங்க நிர்வாகிகள் பிரபாகரன், சாமி, முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 45 ஆண்டுகளாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையானது பதவி உயர்வு வழங்காமல் இந்நாள் வரையும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆங்கில பிரிவு மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் வழங்க வேண்டும். 2006ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட தனி ஊதியத்தை மீண்டும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணி மேம்பட உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உருவாக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: