ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற நாளை கூடுகிறது சிறப்பு சட்டமன்றம்; பாஜக புறக்கணிக்க முடிவு..!!

சென்னை: நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை பாஜக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் திமுக அமைந்ததில் இருந்து தொடர்ந்து ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு சார்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் உள்துறை அமைச்சகம், ஆளுநர் சிலருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, அரசின் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஒப்புதலுக்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான பல்கலை. திருத்த மசோதாக்களை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. இதனால் ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற நாளை சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது.

மசோதாக்களை எந்த திருத்தமுமின்றி நிறைவேற்றும் விதமாக சிறப்பு சட்டமன்றம் நாளை நடைபெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரும்புவதால் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உள்ளதால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

குறிப்பாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி, காந்தி ஆகியோர் இந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில் நாளை பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

The post ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற நாளை கூடுகிறது சிறப்பு சட்டமன்றம்; பாஜக புறக்கணிக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: