ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம்!

ஐப்பசி மாதம் அடை மழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது. காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.

இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசி மாதத்தில் நடக்கின்றன.

தீபாவளி பண்டிகை

தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென் இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வட இந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.

இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் மக்கள் நீராடுகின்றனர். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர். புதிய ஆடைகளை அணிந்து கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்கின்றனர்.புதுமணத் தம்பதியர் தலை தீபாவளியை மணப்பெண்ணின் வீட்டில் கொண்டாடுகின்றனர். அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிப்பாடாக தீபாவளி கொண்டாட்டம் அமைகிறது.

கந்த சஷ்டி

இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வு என்பது விரதமுறையை கடைபிடிப்பது ஆகும். நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரம்பில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களை பெறும் நோக்கில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் முருகனை வேண்டி விரத முறையினை மேற்கொள்வது வழக்கம். ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீர் அருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். விரதத்தின் போது கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முகக் கவசம், கந்தர் கலிவெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்வது வழக்கம். இதனால் உடல் மற்றும் உள்ளத் தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். செல்வ வளம் பெருகும்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம்! appeared first on Dinakaran.

Related Stories: