பூந்தமல்லி அருகே வாகன சோதனையில் கைத்துப்பாக்கி பறிமுதல்: 3 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நேற்றிரவு போலீசாரின் வாகன சோதனையின்போது, ஒரு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு நசரத்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நசரத்பேட்டை, திரவுபதி அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். எனினும், அந்த கார் நிற்காமல் போலீசார் மீது மோதுவது போல் வந்து, நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த காரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். காரில் வந்த 4 பேரில், ஒருவர் மட்டும் இறங்கி தப்பியோடிவிட்டார்.

காரில் இருந்த 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து, நசரத்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், காரில் வந்தவர்கள் திருவள்ளூர் அருகே அரண்வாயல் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24), பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையை சேர்ந்த சுனில் (23), மேப்பூர் தாங்கலை சேர்ந்த நரேஷ்குமார் (23) என்பதும், தப்பியோடியவர் நாகேந்திரன் எனத் தெரியவந்தது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் நசரத்பேட்டை அருகே காரில் சென்ற பாஜ பிரமுகர் பிபிஜிடி.சங்கர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் சாந்தகுமார், தங்களிடம் கைத்துப்பாக்கி கொடுத்து வைத்திருந்ததாக பிடிபட்ட 3 பேரும் கூறியதாகத் தெரியவந்தது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரவீன், சுனில், நரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 3 பேரிடமும் இவர்களுக்கு கைத்துப்பாக்கி எப்படி வந்தது, எங்கு வாங்கப்பட்டது, ஏன் இவர்களிடம் கொடுத்து வைத்துள்ளனர், அந்த கைத்துப்பாக்கி மூலம் யாரையாவது கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்களா, இதில் வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய நாகேந்திரன் என்பவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பூந்தமல்லி அருகே வாகன சோதனையில் கைத்துப்பாக்கி பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: