உலக அரசியலை தாங்க முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உடைந்து கொண்டிருக்கிறது: பொதுச்சபையில் இந்தியா கருத்து

ஐக்கிய நாடுகள் சபை: ‘ஐநா அமைப்பு, குறிப்பாக அதன் பாதுகாப்பு கவுன்சில், 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் அழுத்தத்தின் சுமையை தாங்க முடியாமல் நொறுங்கிக் கொண்டிருக்கிறது’ என பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா கூறி உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஐநா பொதுச் சபை கூட்டத்தில், ‘பொதுச் சபையின் பணிக்கு புத்துயிர் அளிப்பது’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

இதில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர ஆலோசகர் பிரதிக் மாத்தூர் பேசுகையில், ‘‘ஐநா பொதுச் சபையானது அதன் அடிப்படை பொறுப்புகள் மற்றும் செயல்முறையில் இருந்து படிப்படியாக தொடர்பை இழந்து வருகிறது என்கிற கருத்து அதிகரித்து வருகிறது. எனவே, பன்முகத்தன்மை, மறுசீரமைப்பு, நியாயமான உலகமயமாக்கல் மற்றும் சீர்த்திருத்தம் ஆகியவற்றை நீண்ட காலத்திற்கு தள்ளி வைக்க முடியாது என்று இந்தியா நம்புகிறது. ஐநா அமைப்பு குறிப்பாக பாதுகாப்பு கவுன்சில், 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் அழுத்தத்தின் சுமையை தாங்க முடியாமல் நொறுங்குவதை காண்கிறோம். ஆகவே, உலகளாவிய கொள்கை வகுப்பதிலும், நாடு கடந்த பிரச்னைகளை தீர்ப்பதில் பலதரப்பு அணுகுமுறையை வகுப்பதிலும் ஐநா மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும் பொதுச் சபை முன்னிலை வகிக்க வேண்டும்’’ என்றார்.

* 5வது தீர்மானம்

இதற்கிடையே, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல், ஹமாஸ் போர் விவகாரம் தொடர்பாக 5வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. காசா முழுவதும் உடனடியாக தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டுமென மால்டா நாடு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட 4 தீர்மானங்களும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

The post உலக அரசியலை தாங்க முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உடைந்து கொண்டிருக்கிறது: பொதுச்சபையில் இந்தியா கருத்து appeared first on Dinakaran.

Related Stories: