மாணவர்கள் நலன் கருதி பாடங்களை முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: மாணவர்கள் நலன் கருதி பாடங்களை முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் அவ்வப்போது விடுமுறை அளிக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. இம்மாதிரியாக விடப்படும் அவசரகால பள்ளி விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், பருவகால மழை பெய்து வருவதால் அவ்வப்போது மாவட்டத்தின் நிலை குறித்து அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்கள். அதே போல அடுத்தடுத்து, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வு ஆகியவை வரவுள்ளது அதனால் சனிக்கிழமைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

நீட் மற்றும் JEE நுழைவு தேர்வில் அரசு பயிற்சியகத்தில் இதுவரை 46,216 மாணவர்கள் நீட் தேர்வுக்கும், 29 ஆயிரம் மாணவர்கள் JEE நுழைவு தேர்வுக்கும் என மற்ற நுழைவு தேர்வுகள் சேர்த்து மொத்தமாக 1,07,225 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் விளையாட்டுத்துறை சார்பில் ஆண்டு தோறும் 25000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அளிக்கப்படுகிறது. ஆனால் அதில் குறிப்பிட்ட அளவிலான விளையாட்டு பொருட்களையே மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் வரும் காலங்களில் ஒரு பொது கணக்கீட்டு எடுத்து அதன் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவியான விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே வாங்கி அனுப்பும்படி செயல்படுத்த உள்ளோம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

The post மாணவர்கள் நலன் கருதி பாடங்களை முடிக்க சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: