ஈரோடு பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்

 

ஈரோடு, நவ.11: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு ரயில் நிலையம், மத்திய பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான வெளியூர் வாசிகள் தங்கி கல்வி பயின்றும், பல்வேறு துறைகளில் பணிபுரிந்தும் வருகின்றனர். அவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு நேற்று முதல் செல்ல தொடங்கி உள்ளனர்.

இதனையொட்டி ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்காக ஏற்கனவே ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. அதே போன்று பஸ்களிலும் முன்பதிவு இருக்கைகள் நிரம்பிவிட்டன. ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக, நேற்று அதிகாலை முதலே ஈரோடு ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. ஈரோடு பஸ் ஸ்டாண்டிலும் நேற்று மதியம் முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல, இன்றும் ஈரோடு ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஈரோடு பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: