மாவட்டம் முழுவதும் கனமழை: குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: மேலும் 11 வீடுகள் இடிந்தன

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்த கோதையாறு, பரளி ஆறு மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது செல்கிறது, மேலும் 11 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. காலை நேரம் வெயிலும், பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பகல் வேளையில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் தொடங்கி இரவு வரை கனமழை நீடித்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக களியல் பகுதியில் 76 மி. மீ., மாம்பழத்துறையாறு பகுதியில் 65.4 மி. மீ., ஆனைகிடங்கு, திற்பரப்பு பகுதியில் 64 மி. மீ. மழையும் பதிவாகி இருந்தது.

ஏற்கனவே பெய்த மழையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் வெள்ள அபாய அளவை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. மேலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும், மழை வெள்ளத்தினாலும், கோதையாறு, பரளி ஆறு மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, ஆறுகளில் குளிக்க வேண்டாம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. வெள்ள பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இன்று காலை நிலவரப்படி 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.87 அடியாக இருந்தது. அணைக்கு 465 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. 77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.17 அடியாக இருந்தது. அணைக்கு 662 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 650 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றார்-1ல் 15.67 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 117 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 129 கன அடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டிருந்தது.

18 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சிற்றார்-2ல் 15.78 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கை அணை நீர்மட்டம் 8.40 அடியாக தொடர்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 85 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. 85 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடியாகும். அணைக்கு 12.3 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் சராசரியாக 30.58 மி. மீ மழை பதிவாகி உள்ளது. மழை காலை, மாலை என விட்டு, விட்டு பெய்து வருவதால் தண்ணீர் அதிகமாக வந்தாலும் உடனே வடிந்து விடுகிறது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையின் காரணமாக 4 வீடுகள் பகுதியளவும், 7 வீடுகள் முழுமையாகவம் என்று மொத்தம் 11 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

The post மாவட்டம் முழுவதும் கனமழை: குமரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: மேலும் 11 வீடுகள் இடிந்தன appeared first on Dinakaran.

Related Stories: