தீபாவளி நெருங்கும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தீபாவளி நெருங்கும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணர்கள், உடலுறுப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் வரும் நவ.12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது வெடி விபத்துகள் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசும், பொது சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பண்டிகையின்போது வெடி விபத்துகள் ஏற்பட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். இதன்படி பொது சுகாதாரத்துறையின் இயக்குனர் அனைத்து மாவட்ட இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் “பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அவர்களை கவனமாக கையாள வேண்டும், கையில் பட்டாசு வைத்து வெடிக்க கூடாது, ஆடைகளை அணிந்துதான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பிற்காக தண்ணீர் வைக்க வேண்டும்” உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத்துறையின் இயக்குனர் அனைத்து மாவட்ட இயக்குனர்களுக்கும் வழங்கியுள்ளார்.

இதே போன்று மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் சுகாதாரத்துறையின் இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட துணை சுகாதார மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளும் தேவையான கையிருப்புகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

The post தீபாவளி நெருங்கும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: