மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு அலுவலகம், ரயில் நிலையம், சிப்காட், தனியார் கம்பெனிகள், இந்து சமய அறநிலையத் துறை கோயில்கள், மாமல்லபுரம் சுற்றுலா தலம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முட்டுக்காடு – முதலியார் குப்பம் படகு குழாம், ஆலம்பறை கோட்டை, நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை, கோவளம் நீலக்கொடி கடற்கரை, பாம்பு மற்றும் முதலை பண்ணை ஆகியவை உள்ளதால் மாவட்டம் முழுவதும் வளர்ச்சி அடைந்த பகுதியாக உள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் குடும்பத்தில் உள்ள கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், பெரும்பாலான வீடுகளில் முதியோர்களே உள்ளனர். இதனை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு திருடர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வது போல் நோட்டமிட்டு செயின் பறிப்பு, பைக் மற்றும் செல் போன்களை திருடி தங்களின் கைவரிசையை காட்டி வருகின்றனர். தற்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடக்கிறது.
இப்பணிகளில், உள்ளூர் தொழிலாளர்களை விட வடமாநில தொழிலாளர்களே அதிகம் வேலை பார்க்கின்றனர். வடமாநில தொழிலாளர்களுக்கு கூலி குறைவு என்பதாலும், இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாலும், கட்டிட கான்டிராக்டர்கள் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இருந்து ஒரு தொகையை நிர்ணயம் செய்து, அதிகளவில் ஆட்களை அழைத்து வருகின்றனர். அதன்படி, ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் முகாமிட்டு வேலை பார்த்து வருகின்றனர்.
இது தவிர, மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகள், டீ கடைகள், சலூன் கடைகள், பேக்கரி, தனியார் கல்லூரி, தனியார் கம்பெனி மற்றும் ஓட்டல்களில் வட மாநிலத்தவர்களே அதிகளவில் வேலை பார்க்கின்றனர். இப்பகுதிகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறு சிறு திருட்டு மற்றும் வழிப்பறி ஆங்காங்கே நடக்கிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பவழக்காரன் சத்திரம், பட்டிப்புலம், சூளேரிக்காடு, கடம்பாடி, மணமை, வட கடம்பாடி, பெருமாளேரி, காரணை, நந்திமா நகர், குழிப்பாந்தண்டலம், எச்சூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டில் கட்டி வைத்திருக்கும் ஆடு, மாடுகள், இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரியும் ஆடு – மாடுகளை மினி ஆட்டோ, மினி லாரிகளை எடுத்து வந்து மர்ம நபர்கள் வாய் மற்றும் கால்களை கயிற்றால் கட்டி திருடி செல்கின்றனர்.
இதனால், மேற்கண்ட பகுதிகளில் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட எஸ்பி சாய் பிரணீத், இதில் முழு கவனம் செலுத்தி ஆடு – மாடுகளை திருடி செல்லும் மர்ம நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் டவுன் பகுதிகளை தவிர மற்ற கிராமப் பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அடிக்கடி திருடு போகிறது. சிறிய அளவில் நடைபெறும் திருட்டு என்பதால் சம்பந்தப்பட்ட போலீசில் யாரும் புகார் தருவது இல்லை.
தொழிலாளர்கள் என்ற போர்வையில் வடமாநிலங்களை சேர்ந்த சமூக விரோதிகளும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். வெளிமாநில ஆசாமிகள் குறித்து உள்ளூர் போலீசில் முறையான பதிவுகள் இருக்க வேண்டும். ஆனால், போலீசார் இவர்களை கண்டுகொள்ளாததால், இவர்கள் குறித்த விவரம் தெரியாத நிலை உள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பல்வேறு பணிகளுக்கு செல்கின்றனர். இவர்கள், தமிழகத்திற்கு வரத்தொடங்கிய பிறகு சமீபகாலமாக வீடுகளின் வெளியே இருக்கும் காலி கஸ் சிலிண்டர்கள், கார், பைக்குகள், பழைய இரும்பு பொருட்கள்,
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் லாரி, கிரேன் மற்றும் பொக்லைன் இயந்திரங்களில் இருந்து பேட்டரிகள் திருடு போவது வாடிக்கையாக உள்ளது. திருட்டில் ஈடுபடுபவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களா? அல்லது சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்களா? என்பதில் மிகப் பெரிய குழப்பம் நீடிக்கிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி உடனடியாக தலையிட்டு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களின் விபரங்கள் சேகரித்து, அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். வழக்கமாக, ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே சுதாரித்துக் கொள்ளும் போலீசார், இதுபோன்ற சம்பவங்ககள் நடப்பதற்கு முன்பு சுதாரிக்க வேண்டும்’ என்றனர்.
* குறைந்த விலைக்கு விற்பனை
சாதாரணமாக ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும், ஒரு மாடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும் விற்கப்படுகிறது. கிராம பகுதிகளில் இருந்து திருடப்படும் ஆடு, மாடுகள் கள்ளச் சந்தையில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. குறைந்தளவிற்கு விற்கப்படுவதால் கறிக்கடை நடத்துபவர்கள் மர்ம நபர்களையே நாடுகின்றனர்.
* சனிக்கிழமைகளில் திருட்டு
மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஆடு, மாடுகள் திருடுபோவது தொடர்கதையாக உள்ளது. இதில், குறிப்பாக சனிக்கிழமை இரவில் அதிகளவு ஆடு, மாடுகளை திருடி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கறிக்கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
* கடும் நடவடிக்கை வேண்டும்
மாவட்டம் முழுவதும் கிராம பகுதிகளில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், வயதான தம்பதிகள் சிலர், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் கஷ்டப்பட்டு தங்களது ஆடு, மாடுகளை பராமரித்து வருகின்றனர். அவர்கள், தேவைக்கு ஏற்ப ஆடு, மாடுகளை விற்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி குடும்பத்தை வழி நடத்துகின்றனர். சிலர் ஆடு, மாடுகளை விற்று தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பது மட்டுமின்றி, திருமணமும் நடத்தி வைக்கின்றனர். ஆனால், மர்ம நபர்கள் இரவில் வந்து சுலபமாக ஆடு, மாடுகளை திருடி வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். திருட்டு செயலில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்களில் ஆடு, மாடுகள் திருட்டு : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.
