எதற்காக இந்த ஒரு நாள்?

கிறிஸ்துவம் காட்டும் பாதை

மரணம் ஒரு முடிவல்ல. அது ஒரு இளைப்பாறுதல். மரித்த லாசருவை மரித்துப் போனான் என்று இயேசு சொல்லாமல் ‘நித்திரையாயிருக்கிறான்’ என்றுதான் சொன்னார். நித்திரையிலிருந்த ஒருவனை எழுப்புவதுபோல லாசருவை ஆண்டவர் உயிரோடு எழுப்பிக் கொடுத்தார்.

மண்ணிலே பிறந்த யாவரும் மண்ணுக்கே திரும்பியாகவேண்டும் என்ற இறைவனின் வார்த்தையைக் கேட்டு, பின் அவரவர் வாழ்வை மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இரண்டாம் நாள் அதுவரை கண்டுகொள்ளப்படாத கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு, மெழுகுவர்த்தியேற்றி, பூமாலைகளால் அழகாக அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

எதற்காக இந்த ஒரு நாள்? ஏன் இந்த ஒவ்வொருவரையும் இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று மனதில் ஏராளமான கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கொடுக்கும் விதமாக நமது தாய்த் திருச்சபையானது நவம்பர் இரண்டாம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக சிறப்பிக்கின்றது.

கருவறையும், கல்லறையும் கடவுளால் படைக்கப்பட்டவைதான். இரண்டும் ஒன்றுக்கொன்று இணையானது, தொடர்புடையது, இரண்டும் இருள்படர்ந்துதான் இருக்கும். ஆனால், கருவறையும் கல்லறையும் அதோடு மட்டும் நின்றுவிடுவதல்ல, முடிவதுமல்ல. மாறாக, இந்தக் கருவறையிலிருந்து வெளிவரும்போது புதுவாழ்வு பிறக்கின்றது. கல்லறையிலிருந்து வெளிவரும்போது நிலை வாழ்வு உரிமைப் பேறாகக் கிடைக்கிறது. இரண்டுமே வாழ்வை நமக்குத் தருகின்றன.

இதற்கிடையில் நின்றுவிடுகிறவர்களுக்கு மரணம் வந்து சேர்கின்றது. இவை இரண்டிலிருந்து வெளியில் வருகிறவர்களுக்கு புதுவாழ்வு புலப்படுகின்றது. இந்த ஒரு உன்னதமான நிலையை நாம் ஒவ்வொருவருமே இறைவன் இயேசுகிறிஸ்துவின் இவ்வுலக வாழ்விலிருந்தும், அவர் செய்த புதுமைகளிலிருந்தும் கண்டுணர முடியும். எவ்வாறெனில் இறந்த ஒவ்வொருவரும் கடவுளால் உயிர் பெற்றெழுவர் என்பதை வெளிப்படுத்த இறந்த 12 வயது சிறுமியின் உயிர் பெறும் நிகழ்வும் (மாற்கு 5:41), இறந்த லாசர் உயிர் பெறும் நிகழ்வும் (யோவான் 11:43) நமக்கு எடுத்துக்காட்டுகள்.

நமது வாழ்வும் மரணத்தோடு நின்றுவிடுவதல்ல. மாறாக, நாமும் மரணத்தைத் தாண்டிய புதுவாழ்வை இறைவனால் பெறுவோம். எனவே, இந்த ஆன்மாக்கள் தினமானது நம் ஒவ்வொருவரையும் புது, நிறை வாழ்வை நோக்கிய பாதையில் பயணிக்க அழைப்பு விடுக்கின்றது. கடந்த காலங்களை நினைத்து வருந்துவதை விட்டு, வருகின்ற நாட்களில் நாலு பேருக்கு நல்லது செய்து இந்த நானிலம் போற்றும் அளவுக்கு நமது வாழ்வை மாற்ற முயல்வோம்.

அதன் வழியாக நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்வோம். ‘சாவே, உனக்கு ஒரு சாவு வராதா?’ என்று கேட்பதைத் தவிர்த்து, சாவைத் தாண்டிய புதுவாழ்வை, நிறைவாழ்வை அடையப் போராடுவோம். மண்ணக வாழ்வை மானிடர் யாவரும் நினைத்துப் பார்க்கும் வண்ணம் புனித வாழ்வு வாழ்வோம்.

– ‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

The post எதற்காக இந்த ஒரு நாள்? appeared first on Dinakaran.

Related Stories: