சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்ரீலங்காவை சேர்ந்த கமலநாதன் என்பவர் அமெரிக்காவில் இருந்து பணிபுரிந்து திரும்பியதாகவும், தனது நண்பர்களான மடிப்பாக்கத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திக்கேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக்கேயன் ஆகியோருடன் சென்னையில் சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு பணம் கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தி.நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஆற்காடு சாலையில் சுற்றி திரிந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அச்சமயம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான பணம் சிக்கியது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இலங்கைத் தமிழர் கமலநாதன், வெங்கடகிருஷ்ணன், கார்த்திக்கேயன், கார்த்திக்கேயன் ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: