கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தொழிலாளர்கள்

 

சேலம், நவ.6: சேலத்தில் மூன்று மாதமாக சம்பளம் வழங்காத கான்ட்ராக்டரை கண்டித்து, வட மாநில தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.சேலம் அழகாபுரம் பகுதியில் பணிபுரிந்து வரும் பீகார் மாநில கட்டிட தொழிலாளர்கள் 11 பேர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கூறுகையில், ‘பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர், எங்களை ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைக்காக சேலம் அழைத்து வந்தார். அழகாபுரம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக கட்டிட வேலை செய்து வருகிறோம். ஆனால் இன்று (நேற்று) வரை, எங்களுக்கு ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இது குறித்து கான்ட்ராக்டரிடம் கேட்டபோது, பணியில் சேர்த்து விட்ட ராஜாவிடம் கேட்குமாறு கூறுகிறார். 3 மாதமாக ஊதியம் வழங்காததால் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவிப்பதுடன், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, எங்களுக்கு 3 மாத ஊதியம் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’ என்றனர்.
இதையடுத்து போலீசார் ஒப்பந்ததாரரான ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்தனர். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி ராஜா மற்றும் வட மாநில தொழிலாளர்களை அழகாபுரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: