நடப்பு உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் 37வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் பொறுமையாக விளையாடினார்.
அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனை அடுத்து விராட் கோலி களமிறங்கினார். இதையடுத்து சுப்மன் கில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.
விராட் கோலி மற்றும் ஸ்ரேயா செய்யர் இருவரும் இணைந்து விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் சொற்ப ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டி விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி தனது 49 ஒருநாள் சதம் விளாசி சச்சினின் சாதனையை சமன் செய்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 326 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், ரோஹித் சர்மா 40 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடர்ந்து சதம் அடித்து வந்த குயின் டன் டி காக் ஐந்து ரன்களிலும்,கேப்டன் பெவுமா 11 ரன்களிலும் வேண்டர் டூஷன் 13 ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம் 9 ரன்களிலும், கிளாசண் 1 ரன்னிலும்,டேவிட் மில்லர் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணியின் கீழ் வரிசை வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவரில் 83 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறந்தநாளில் 49வது சதமடித்து சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
The post தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி appeared first on Dinakaran.
