தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை எதிரொலி; சிவகாசி ஆலைகளில் ரூ.700 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்..!!

விருதுநகர்: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், நாடு முழுவதும் சுமார் 90 விழுக்காடு பயன்பாட்டை பூர்த்தி செய்கின்றன. இந்த தொழிலில் நேரடியாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் கடுமையாகி வருவதால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கமாக வடமாநிலங்களில் தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே பட்டாசுகளின் தேவையை வியாபாரிகள் முன்பதிவு செய்துவிடுவர். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி முன்பதிவு தொடங்கி, ஒரு மாதத்திற்கு மேலாகியும் வடமாநில ஆர்டர்கள் பெருமளவு வரவில்லை.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஆலைகளில் பெருமளவு பட்டாசுகள் தேக்கமடைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். டெல்லியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பட்டாசு ஆலை விபத்தை காரணம் காட்டி, விற்பனை உரிமம் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டிய பட்டாசுகளை மற்ற மாநிலங்களுக்கு குறைந்த விலைக்கு அனுப்பும் நிலை உருவாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை, கர்நாடகாவில் விற்பனை உரிமம் வழங்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் சிவகாசியில் கடந்த ஆண்டை காட்டிலும் 20 விழுக்காடு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது 700 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, சரவெடி உற்பத்தி கூடாது என்ற நீதிமன்ற கட்டுப்பாடுகளால் பட்டாசு தொழில் நலிவடைந்து வரும் நிலையில், மாநில அரசுகளாவது தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

The post தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை எதிரொலி; சிவகாசி ஆலைகளில் ரூ.700 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: