சமூக மேம்பாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பணிகள் ஆழமாக வேரூன்றி இருந்தது: பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி

டெல்லி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை கடந்த 28ம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் லட்சார்ச்சனை நடைபெற்றது. பசும்பொன் மற்றும் கமுதி பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பால் குடம் எடுத்து வந்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டத்துடன் வந்தும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில், மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.

சமூக மேம்பாட்டில் முத்துராமலிங்கத் தேவரின் அரும் பணிகள் ஆழமாக வேரூன்றி இருந்தது. விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சமூக மேம்பாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பணிகள் ஆழமாக வேரூன்றி இருந்தது: பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: