அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், அக். 29: காஞ்சிபுரம் காரைப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் காரைப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நேற்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து வண்ண பலூன்களை கலெக்டர் பறக்க விட்டார்.

பின்னர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கி அவர் பேசியதாவது :- பிங்க் அக்டோபர் என்பது மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பதற்கும் ஊக்கமளிக்கும் ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும். மார்பக புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இது பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 14% ஆகும். 2020ல் குலோபோ கேன் தரவுகளின்படி, இந்தியாவில் 90,000 இறப்புகளுடன் 1,78,000 புதிய மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன்மூலம் இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். இதேபோல் ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து காரணிகள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 2022ம் ஆண்டில் மார்பக ஊடுகதிர் படச்சோதனை செய்த நோயாளிகளின் எண்ணிக்கை 614 ஆகும். இந்த ஆண்டு செப்டம்பர் வரை 1,715 நோயாளிகள் மார்பக ஊடுகதிர் பரிசோதனைசெய்து பயனடைந்துள்ளனர். 2018ல் சிகிச்சை பெற்ற 2,194 புற்றுநோயாளிகளில், 354 மார்பக புற்றுநோயாளிகள் (16.13%) கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றனர். 2022ம் ஆண்டில் சிகிச்சை பெற்ற 2,022 புற்றுநோயாளிகளில் 423 மார்பக புற்றுநோயாளிகள் (19.28%) கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1,886 மார்பக புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பிங்க் அக்டோபரில், மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்களை கொண்டாடுகிறோம். அதேநேரத்தில் மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்கிறோம். மார்பகப் புற்றுநோயைப் பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவதன் மூலமும், உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களை தொடர்ந்து மார்பகப் பரிசோதனை செய்ய ஊக்குவிப்பதன் மூலமும் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்வில் போது புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன், நிலைய மருத்துவமனை அலுவலர் சிவகாமி, உதவி பேராசிரியர் ஜெயபாரதி, மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: