பாசி நிதிநிறுவன மோசடி தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் கோர்ட்டில் ஆஜர்

கோவை: பாசி நிதிநிறுவன மோசடி தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் கோர்ட்டில் ஆஜராகியுள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆஜராகாத ஐ.ஜி பிரமோத்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐ டிஐஜி-க்கு கோவை சிபிஐ நீதிமன்றம் அக்.25ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

நிதி நிறுவன மோசடி வழக்கில் பெண் இயக்குநரை கடத்தி பணம் பறித்ததாக பிடிவாரண்ட் பிறப்பித்தனர். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு எதிராக 2011ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தனர். ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.

இதற்கிடையில், ‘இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

ந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை காப்பாற்றுவதற்காக, ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன் என்கிற அண்ணாச்சி, திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது.

2 முறை குற்றச்சாட்டு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டும், ஐ.ஜி., பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு புதன்கிழமை அக்.25ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர, மற்ற 4 பேரும் ஆஜராகினர். இந்நிலையில் பாசி நிதிநிறுவன மோசடி தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

The post பாசி நிதிநிறுவன மோசடி தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: