நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் எனப்படும் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தொடக்கம் : அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை : நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் எனப்படும் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ‘ஹெல்த் வாக்’ சாலையை ஆய்வு செய்த பின்னர் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் , நவ.4ம் தேதி 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் கொண்ட ‘ஹெல்த் வாக் சாலை’ தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மற்ற மாவட்டங்களுக்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன்ட் நகர் அவன்யூ பகுதி சாலைகளில் கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.

கொரோனா காலத்திற்குப் பிறகு சமீபகாலமாக இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது; மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம். கடந்த 10 மாதங்களில் 5,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் இறந்துள்ளனர்; வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக 490 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அக் 29ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஹெல்த் வாக் சாலை..

சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங்கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வரை ஹெல்த் வாக் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டுள்ளது. இதைத்தவிர, விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். அன்று காலை 6 மணிக்கு தொடங்கி வைத்து அவர் நடைப்பயிற்சியும் மேற்கொள்ளவுள்ளார்.

The post நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் எனப்படும் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தொடக்கம் : அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: