இறைவன் தங்கள் முன்தோன்றி, ஒரு வரம் தருவதாகக் கூறினால், என்ன கேட்பீர்கள்?

இறைவன் தங்கள் முன்தோன்றி, ஒரு வரம் தருவதாகக் கூறினால், என்ன கேட்பீர்கள்?
– ஜி.கே.நாராயணமூர்த்தி, மேலசெவலப்பாளையம்.

இறைவனே கண் முன் தோன்றிடும்போது வரமாக எதையாவது கேட்கத் தோன்றுமா என்ன? புராண நாட்களிலிருந்தே இறைவனை காண்பதற்காக கடுந்தவம் இயற்றுவதும், அவர் தோன்றிய உடனே தனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. இறையருளை தவிர சுயநலமாக எதையாவது எதிர்பார்த்து அவர் தனக்கு முன் தோன்ற வேண்டும் என்று நினைப்பது அறியாமை. ஒன்றுமில்லை, திருப்பதி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறீர்கள்.

அவரை நேரடியாக தரிசிக்கும் முன் அது வேண்டும், இது வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலை மனசுக்குள் தயாரித்துக் கொள்கிறீர்கள். ஆனால், கருவறைக்கு போனதும், ‘ஜரகண்டி’ தள்ளுதலில் எத்தனை கோரிக்கைகளை இறைவன் முன் நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறது? புத்திசாலி பக்தன், வேங்கடவனின் பார்வை தன் மீது விழுந்தால் போதாதா என்றுதான் எதிர்பார்ப்பான். ஆகவே, கடவுளையே கண்ணெதிரே கண்ட பின்னர், கேட்பதற்கு அதைவிட உயர்வாக என்னதான் இருக்கமுடியும்? என் எதிரே மட்டுமல்ல, வேறு எவர் முன்னர் தெய்வம் தோன்றினாலும் அப்படித்தான் எண்ணமுடியும். அந்த ஞானஒளி தோன்றிய மறுகணம் நம்முடைய அஞ்ஞான இருள் தானே அகன்றுவிடும்.

‘அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்’ – இது இன்றைக்கும் செல்லுபடியாகுமா என்ன?
– எஸ்.பி.கே.மூர்த்தி, பெங்களூரு.

அரச தண்டனை சாட்சியங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்படுவது; தெய்வ தண்டனை மனசாட்சியை அடிப்படையாக வைத்து வழங்கப்படுகிறது. சாட்சியங்களின் பொய்யுரையால் அரச தண்டனை அநியாயமானதாக அமையலாம்; ஆனால், மனசாட்சி பொய்யே சொல்லாது என்பதால், தெய்வ தண்டனை மிகச் சரியானதாகவே இருக்கும். வழக்கு, விசாரணை என்று முடிந்தபிறகு பளிச்சென்று அரசன் தீர்ப்பளித்து விடுவான்; ஆனால், தெய்வம் அவ்வளவு வேகமாக தண்டித்து விடாது. அரசனின் தண்டனையில் குற்றவாளிக்கு ஆயுள் முடியலாம்; அவன் திருந்தலாம் என்று நினைத்தாலும் முடியாது.

ஆனால், தெய்வம் வாய்ப்புகள் கொடுக்கும். தானாகவே திருந்துவதற்கும், பிற தண்டனையாளர்களின் அனுபவங்களைச் சுட்டிக்காட்டியும் பல சந்தர்ப்பங்களைத் தரும். அப்படியும் அவன் திருந்தாவிடில் அவனுடைய குற்றத்திற்கேற்ப தண்டனையை அவன் அனுபவிக்க நேரிடுகிறது. அரசனின் தீர்ப்பிற்குப் பிறகு நியாய அநியாயத்தை, உண்மை – பொய்யை, மன்னிப்பு – திருந்துதலை எதிர் பார்க்க முடியாது; ஆனால், ஆண்டவன் இதற்கெல்லாம் தேவையான அவகாசம் கொடுத்துவிட்டுத்தான் தீர்ப்பையே எழுதுகிறான். தெய்வம் ‘நின்று’ கொல்வது என்பது இதுதான். இது அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் செல்லுபடியாகும்.

பிரம்மஹத்தி தோஷம் என்றால் ஒருவகை பாவம் என்கிறார்களே… அதுதான் மிகக் கொடிய பாவமாமே?
– சாந்தா வெங்கட சுப்பிரமணியன், கிழக்குத் தாம்பரம்.

பிரம்மஹத்தி தோஷம் என்பது உயிர்க் கொலையால் விளையும் பாவம். குறிப்பாக மனித உயிரைக் கொல்லும் பாவம். இதுதான் மிகக் கொடிய பாவம் என்பது உண்மைதான். ஏனென்றால் வாயில்லா ஜீவன்களைக் கொல்லும்போது அவை கதறுகின்றன. ஆனால், மனிதக் கொலையில் கொல்லப்படுபவரின் உணர்வுகள் கொல்பவரால் அறியக்கூடியவை. அதே கொடுமையை அவராலும் அனுபவிக்க முடியும். அதனால்தான் இந்தப் பாவம் மிகக் கொடியது என்றார்கள்.

ஆனால், எந்த பாவமும் நெருங்காதிருக்க உங்களுக்கு ஒரு யோசனை சொல்லவா? ஒரே ஒரு பாவத்தை மட்டும் நீங்கள் விலக்கிவிட்டீர்களானால் போதும்; உங்களால் வேறு எந்தப் பாவமும் செய்ய முடியாது. அது `அகம்பாவம்’! மனிதனுடைய ஆணவத்தால், அகந்தையால், அகம்பாவத்தால்தான் பெரும்பாலான குற்றங்கள் நிகழ்கின்றன. ஆகவே அகம்பாவத்தை மனதிலிருந்து அகற்றிவிடுங்கள்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post இறைவன் தங்கள் முன்தோன்றி, ஒரு வரம் தருவதாகக் கூறினால், என்ன கேட்பீர்கள்? appeared first on Dinakaran.

Related Stories: